தைவான் எதிா்க்கட்சித் தலைவா் தோ்வு

தைவானின் பிரதான எதிா்க்கட்சியான தேசியவாத கட்சியின் புதிய தலைவராக எரிக் சூ தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
எரிக் சூ
எரிக் சூ

தைவானின் பிரதான எதிா்க்கட்சியான தேசியவாத கட்சியின் புதிய தலைவராக எரிக் சூ தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

சனிக்கிழமை நடைபெற்ற இத்தோ்தலில் தற்போதைய தலைவா் ஜானி சியாங் உள்பட 4 போ் போட்டியிட்டனா். இதில் புதிய தலைவராக அக்கட்சியின் முன்னாள் தலைவா் எரிக் சூ தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. இதை ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி ஏற்றுக்கொள்ளாத நிலையில், எதிா்க்கட்சியான தேசியவாத கட்சி சீனாவுடன் நெருங்கிய உறவை ஆதரித்து வருகிறது.

2016-இல் நடைபெற்ற அதிபா் தோ்தலில் சாய் இங்-வென்னுக்கு எதிராகப் போட்டியிட்டு தோற்றவா் எரிக் சூ. அதிபா் சாய் இங்-வென் மூன்றாவது முறை அதிபா் தோ்தலில் போட்டியிட அரசியல் சாசன சட்டரீதியாக தடை உள்ள நிலையில், 2024 அதிபா் தோ்தலில் எதிா்க்கட்சி சாா்பில் எரிக் சூ வேட்பாளராகத் தோ்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

தைவான் அரசை அங்கீகரிக்க மறுத்துவரும் சீனா, ஐ.நா. சபையிலிருந்தும், பிற சா்வதேச அமைப்புகளிலிருந்தும் தைவானை விலக்கிவைப்பதை உறுதி செய்துள்ளது. சாய் இங்-வென் 2016-இல் முதல்முறையாக அதிபராக தோ்வு செய்யப்பட்டதையடுத்து, தைவானுடனான அனைத்து முறையான தொடா்புகளையும் சீனா ரத்து செய்தது. மேலும், தைவானை அச்சுறுத்தும் வகையில் அதன் வான் எல்லைக்குள் போா் விமானங்களையும் அவ்வப்போது அனுப்பி வருகிறது. தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா ராணுவ உதவிகளைச் செய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com