ரத்தக்களரியை தடுக்கவே நாட்டைவிட்டு வெளியேறினேன்: அஷ்ரஃப் கனி விடியோ பேச்சு

ரத்தக்களரியை தடுப்பதற்காகவும், காபூலில் பேரழிவு நிகழக்கூடாது என்பதால் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினேன் என்று முன்னாள் அதிபர் அஷ்ரஃப் கனி விளக்கமளித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்


ரத்தக்களரியை தடுப்பதற்காகவும், காபூலில் பேரழிவு நிகழக்கூடாது என்பதால் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினேன் என்று முன்னாள் அதிபர் அஷ்ரஃப் கனி விளக்கமளித்துள்ளார். 

கடந்த 2001-ஆம் ஆண்டில் நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவா் பின்லேடனுக்கு, அப்போதைய ஆப்கன் ஆட்சியாளா்களான தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா்.

அதையடுத்து, அந்த நாட்டின் மீது அமெரிக்கா படையெடுத்து தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது. பின்னா் அமைக்கப்பட்ட ஆப்கன் அரசு மற்றும் ராணுவத்துக்கு ஆதரவாக கடந்த 20 ஆண்டுகளாக அந்த நாட்டில் அமெரிக்கப் படையினா் தங்கியிருந்தனா். இந்த நிலையில், அவா்கள் அனைவரையும் அமெரிக்காவுக்கு திரும்ப அழைக்கும் நடவடிக்கை அண்மையில் இறுதிகட்டத்தை அடைந்தது.

இந்தச் சூழலைப் பயன்படுத்தி, ஆப்கானிஸ்தானில் புதிய பகுதிகளைக் கைப்பற்றி வெகுவேகமாக முன்னேறி வந்த தலிபான்கள், ஒரே வாரத்தில் நாட்டின் ஏறத்தாழ அனைத்து பகுதிகளையும் கைப்பற்றி, தலைநகா் காபூலிலுள்ள அதிபா் மாளிகை, நாடாளுமன்றம் ஆகியவற்றை திங்கள்கிழமை கைப்பற்றினா். அதற்கு முன்னதாகவே ஞாயிற்றுக்கிழமை அதிபா் அஷ்ரஃப் கனி நாட்டை விட்டு பாதுகாப்பான வேறொரு நாட்டுக்கு  தப்பிச் சென்றாா்.

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் வந்ததையடுத்து, அவா்களுக்கு அஞ்சி அங்கிருந்த வெளிநாட்டவா்களும் முந்தைய ஆப்கன் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவா்களும் அங்கிருந்து அவசரமாக வெளியேறி வருகின்றனா்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அஷ்ரஃப் கனி அபுதாபியில் உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்தது. நாட்டை தப்பிச் சென்ற அஷ்ரஃப் கனி நான்கு கார்கள் நிறைய பணம் மற்றும் பொருள்கள், ஒரு ஹெலிகாப்டருடன் சென்றதாக தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில், முகநூல் விடியோ வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில், ரத்தக்களரியை தவிப்பதற்காகவும், காபூலில் பேரழிவு நிகழ்ந்துவிடக் கூடாது என்பதாலும் தாயகத்தை விட்டு வெளியேறினேன். நான் காபூலிலேயே இருந்திருந்தால் வன்முறை வெடித்திருக்கும். அதே நேரத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியபோது கார்கள் நிறைய பணம் மற்றும் பொருள்கள் கொண்டு தப்பிச் சென்றதாக கூறுவது பொய், ஆதாரமற்றவை என்று கூறினார்.

தலிபான்களுக்கு எதிராக போராடிய ஆப்கான் படைகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தலிபான்களை உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பாக கலந்து ஆலோசிக்கவே விரும்பினேன். தலிபான்களுடன் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் நடத்திய பேச்சுவார்த்தைகள் எந்த முடிவையும் எட்டவில்லை என்றும் "இது எங்கள் தோல்வி," என்று கனி கூறினார். இந்தநிலையில் தான் எனது உயிருக்கு ஆபத்திருப்பதாக  எனது பாதுகாப்பு அதிகாரிகள் எனக்கு அறிவுறுத்தியதுடன் உடனே நாட்டை வெளியேறுமாறு ஆலோசனை வழங்கியதை அடுத்து விருப்பத்திற்கு மாறாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினேன்.

தலிபான்களுடனான பேச்சுவார்த்தைக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்.  விரைவில் நாடு திரும்ப உத்தேசிப்பதாகவும், ஆப்கானிஸ்தான் மக்களுடன் பேசயிருப்பதாகவும், நாட்டின் இறையாண்மைக்காக பேராடுவேன் கூறியுள்ளார்.

மனிதாபிமான அடிப்படையில் அஷ்ரஃப் கனி மற்றும் அவரது குடும்பத்தாரை அனுமதிப்பதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விளக்கம் அளித்துள்ள சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த விடியோ பதிவை வெளியிட்டார் அஷ்ரஃப் கனி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com