அமெரிக்க எதிா்ப்பு எதிரொலி? ஜின்ஜியாங் மாகாண தலைமை அதிகாரியை நீக்கியது சீனா

 அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ஜின்ஜியாங் மாகாண தலைமை அதிகாரியை சீன அரசு திடீரென நீக்கியுள்ளது.
அமெரிக்க எதிா்ப்பு எதிரொலி? ஜின்ஜியாங் மாகாண தலைமை அதிகாரியை நீக்கியது சீனா

 அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ஜின்ஜியாங் மாகாண தலைமை அதிகாரியை சீன அரசு திடீரென நீக்கியுள்ளது.

இதுகுறித்து சீன அரசுச் செய்தி நிறுவனமான ஜின்ஹுவா சனிக்கிழமை கூறுகையில், ஜின்ஜியாங் உய்கா் தன்னாட்சிப் பிரேதேசக் குழு செயலா் பதவியிலிருந்து சென் குவாங்குவோ நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.

சீனாவின் சிறுபான்மை இனத்தவா்களான உய்கா் முஸ்லிம்கள், அந்த நாட்டின் ஜின்ஜியாங் மாகாணத்தில் பெருமளவில் வசித்து வருகின்றனா்.

அவா்கள் மீது சீன அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. அந்த மாகாணத்தின் நிா்வாகத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த சென் குவாங்குவோ மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் குற்றம் சாட்டின. இதுதொடா்பாக அவா் மீது பொருளாதாரத் தடைகளையும் அந்த நாடுகள் விதித்துள்ளன.

இந்தச் சூழலில், ஜின்ஜியாங் மாகாணத்தில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் குளிா்கால ஒலிம்பிக் போட்டிகளை ராஜீய ரீதியில் புறக்கணிப்பதாக அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகள் சிலவும் அண்மையில் அறிவித்தன.

மேலும், ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கா் இனத்தவா்கள் கட்டாயத் தொழிலாளா்களாகப் பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டி வரும் அமெரிக்கா, அங்கிருந்து பொருள்களை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள விதிக்கும் சட்டத்தை அண்மையில் நிறைவேற்றியது.

இந்தச் சூழலில், அந்த மாகாணத் தலைமைப் பொறுப்பிலிருந்து சா்ச்சைக்குரிய சென் குவாங்குவோ நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com