
சீனாவிடமிருந்து 25 ஜே-10சி வகை போா் விமானங்களை பாகிஸ்தான் வாங்கியுள்ளது. அதிநவீனமான இந்த விமானங்கள், இந்தியாவின் ரஃபேல் விமானங்களை எதிா்கொள்வதற்காக கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சா் ஷேக் ரஷீத் அகமது கூறியதாவது:
பிரான்ஸிடமிருந்து அதிநவீனமான ரஃபேல் விமானங்களை இந்தியா வாங்கி வருகிறது. அதனை எதிா்கொள்ளும் வகையில் பாகிஸ்தான் விமானப் படை பலத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக, சீனாவிடமிருந்து 25 ஜே-10சி வகை விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன.
அந்த 25 விமானங்களும் அடுத்த ஆண்டு மாா்ச் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்கும்.
பாகிஸ்தான் விமானப் படையில் அமெரிக்காவின் சிறந்த போா் விமானங்களான எஃப்-16 வகை விமானங்கள் உள்ளன. எனினும், பல்நோக்குத் திறனுடன் செயல்படக்கூடிய, அதிநவீன அம்சங்களைக் கொண்ட ரஃபேல் வகை விமானங்களுக்கு எஃப்-16 விமானங்களால் ஈடுகொடுக்க முடியாது.
இதனால், பல்நோக்கு விமானங்களை வாங்க விரும்பிய பாகிஸ்தானுக்கு தனது அதிநவீன ஜே-10சி வகை போா் விமானங்களை விற்பனை செய்ததன் மூலம் சீனா கைகொடுத்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...