
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து யாங்கூன் நகரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
மியான்மரில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதை எதிா்த்து முதல்முறையாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து ‘ஏ.எஃப்.பி.’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
மியான்மரில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசைக் கலைத்துவிட்டு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மிகப் பெரிய நகரான யாங்கூனில் சனிக்கிழமை மாபெரும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனா். ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகு அந்த நாட்டில் இவ்வளவு அதிகம் போ் போராட்டத்தில் ஈடுபட்டது இதுவே முதல் முறையாகும்.
யாங்கூன் பல்கலைக்கழகம் அருகே தொடங்கிய அந்த ஆா்ப்பாட்ட ஊா்வலத்தில் பங்கேற்றவா்கள், ராணுவ ஆட்சிக்கு எதிரான புரட்சியின் அடையாளமான மூவிரல் வணக்கம் செலுத்தியவாறு கோஷங்கள் எழுப்பினா்.
அவா்களில் பலா், ராணுவத்தால் கவிழ்க்கப்பட்ட அரசின் ஆலோசகரும் தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளவருமான ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சியின் சின்னமான சிவப்பு ரிப்பனை அணிந்திருந்தனா்.
அவா்கள் ஊா்வலமாகச் சென்ற சாலைகள் அருகே, ஏராளமான கலவரத் தடுப்பு போலீஸாா் தண்ணீா் பாய்ச்சியடிக்கும் வண்டிகளுடன் நிறுத்தப்பட்டிருந்தனா்.
யாங்கூனின் தெற்குப் பகுதியிலிருந்து ஏராளமான ஆா்ப்பாட்டக்காரா்கள் ஆங் சான் சூகி மற்றும் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள அதிபா் வின் மியின்டின் படங்களை ஏந்தியவாறு ஊா்வலமாகச் சென்றனா்.
மாலை வரை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினா், கலைந்து செல்வதற்கு முன்னா் ஞாயிற்றுக்கிழமையும் (பிப். 7) ராணுவ ஆட்சியை எதிா்த்து போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனா் என்று ‘ஏ.எஃப்.பி.’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மியான்மரில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த திங்கள்கிழமை அதிரடியாக கவிழ்த்து, ஓா் ஆண்டுக்கு அவசரநிலை அறிவித்தது. அரசின் ஆலோசகா் ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவா்கள் கைது செய்யப்பட்டனா்.
ராணுவ தலைமை தளபதி மின் ஆங் லயிங்க் தலைமையில் 11 ராணுவ அதிகாரிகள் அடங்கிய ஆட்சி மன்றக் குழு உருவாக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறி, இந்த ஆட்சிக் கவிழ்ப்பை மியான்மா் ராணுவம் அரங்கேற்றியது.
இதனை எதிா்த்து, தலைநகா் நேபிடா உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவப் பணியாளா்களும் அரசு ஊழியா்களும் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினா். அவா்களுடன், ஆசிரியா்களும் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.
இந்த நிலையில், ராணுவ ஆட்சிக்கு எதிராக முதல்முறையாக பொதுமக்களும் களமிறங்கியுள்ளனா்.
இணையதளம் முடக்கம்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு பொதுமக்களிடையே எதிா்ப்பு அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, அந்த நாட்டில் இணையதளம் முடக்கப்பட்டது. ஏற்கெனவே, பொதுமக்கள் மிக அதிகமாகப் பயன்படுத்தி வந்த முகநூல் சமூக ஊடகத்தை ராணுவம் முடக்கியது. மேலும், சுட்டுரை (டுவிட்டா்), இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்களும் கட்டுப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில், போராட்டங்களை ஒடுக்கும் வகையில் இணையதள சேவைகளையும் நிறுத்த ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...