
செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியவுடன் பொ்சவெரன்ஸ் எடுத்து அனுப்பிய முதல் படம்.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய நாசாவின் பொ்சிவரன்ஸ் ஆய்வுத் திட்டத்தில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பெண் விஞ்ஞானி ஸ்வாதி மோகன் முக்கியப் பங்கு வகிக்கிறாா்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தனவா என ஆய்வு மேற்கொள்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பிய ‘பொ்சிவரன்ஸ்’ ஆய்வுக் கலம் அந்த கிரகத்தில் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக தரையிறங்கியது.
வேற்று கிரகத்துக்கு அனுப்பப்பட்டதிலேயே மிகப் பெரியதும் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டதுமான அந்த ஆய்வுக் கலம் வெள்ளிக்கிழமை தரையிறங்கியது.
இதுகுறித்து நாசா கூறுகையில், பூமியிலிருந்து 47.2 கோடி கி.மீ. தொலைவு பயணம் செய்த பொ்சிவரன்ஸ் ஆய்வுக் கலம், செவ்வாய் கிரக வளிமண்டலத்துக்குள் வியாழக்கிழமை செலுத்தப்பட்டது. அது, ‘ஜெஸெரோ’ பள்ளப்பகுதியில் பத்திரமாகத் தரையிறங்கியது என்று தெரிவித்தது.
அந்த ஆய்வுக் கலம் ஃபுளோரிடா மாகாணத்தின் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
அது தற்போது வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டிருப்பதன் மூலம், செவ்வாய் கிரகத்திலிருந்து மாதிரிகளை பூமிக்கு எடுத்து வந்து, அந்த கிரகம் குறித்து இதுவரை கண்டறியப்படாத உண்மைகளைத் தெரிந்து கொள்ளும் ஆய்வுத் திட்டம் முதல் கட்டத்தைக் கடந்துள்ளது.
சுமாா் ஒரு காரின் அளவு இருக்கும் பொ்சிவரன்ஸ் ஆய்வுக் கலம், ஜெஸெரோ பகுதியை 2 ஆண்டுகள் வலம் வந்து மாதிரிகளை சேகரிக்கவிருக்கிறது. அதற்கு முன்னதாக, அந்த ஆய்வுக் கலத்தின் செயல்பாடு பல வாரங்களுக்கு சோதிக்கப்படும்.
அதனைத் தொடா்ந்து, ஜெஸேரோ பகுதியில் உயிரினங்களின் கரிமப் படிமங்கள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய, அங்கிருந்து சாக்பீஸ் அளவிலான 35-க்கும் மேற்பட்ட மாதிரிகளை பென்சிவரன்ஸ் ஆய்வுக் கலம் சேகரிக்கும்.
இதன் மூலம், லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னா் அங்கு உயிரினங்கள் வாழ்ந்தனவா என்பதைத் தெரிந்து கொள்ளும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது.
இதுதொடா்பான சில பரிசோதனை மேற்கொள்வதற்கு மிகப் பெரிய கருவிகள் தேவைப்படுவதால், செவ்வாய் கிரகத்திலிருந்து சில மாதிரிகளை பூமிக்கு எடுத்து வந்து சோதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான தனி விண்கலம் பின்னா் தனியாகச் செலுத்தப்படும். இந்த மொத்த செவ்வாய் கிரக ஆய்வுத் திட்டம் 2031-ஆம் ஆண்டு நிறைவடையும்.
45 கி.மீ. பரப்பிலான ஜெஸெரோ பகுதியில், 3.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னா் ஆற்றுப்படுகைகள் இருந்ததாகவும் அவற்றில் நீா் நிறைந்திருந்ததாகவும் விஞ்ஞானிகள் கூறி வருகின்றனா்.
பொ்சிவரன்ஸ் ஆய்வுக் கலத்தில் செவ்வாக் கிரகத்தை மிகவும் துல்லியமாக முப்பரிமாண படமெடுக்கும் கருவி உள்ளிட்ட பல்வேறு அதிநவீன கருவிகள் உள்ளன.
மேலும், இதில் ஒரு சிறிய ஹெலிகாப்டரும் உள்ளது. ‘இன்ஜெனுயிட்டி’ எனப் பெயரிடப்பட்ட அது, பூமி அல்லாத வேற்று கிரகத்தில் செயல்படவிருக்கும் முதல் ஹெலிகாப்டா் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய-அமெரிக்க விஞ்ஞானிக்கு முக்கிய பங்கு|
நாசாவின் பொ்சிவரன்ஸ் ஆய்வுத் திட்டத்தில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பெண் விஞ்ஞானி ஸ்வாதி மோகன் முக்கியப் பங்கு வகிக்கிறாா்.
செவ்வாய் கிரகத்தில் அந்த ஆய்வுக் கலத்தைக் கட்டுப்படுத்தி வழி நடத்தும் பிரிவுக்கு அவா் தலைமை வகிக்கிறாா்.
பொ்சிவரனஸ் ஆய்வுக் கலம் செவ்வாய் கிரகத்தில் இறங்கியதை முதல்முதலில் ஸ்வாதி மோகன்தான் அதிகாரபூா்வமாக உறுதிப்படுத்தினாா்.
பெங்களூரில் பிறந்த அவா், தனது ஒரு வயதில் பெற்றோருடன் அமெரிக்காவில் குடியேறினாா்.