
சிரியா, ஈராக்கில் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் அமெரிக்கப் போா் விமானங்களில் சில (கோப்புப் படம்).
சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 17 ஈரான் ஆதரவுப் படையினா் பலியாகினா்.
இந்த மாதம் அமெரிக்க ராணுவ நிலை மீது அந்தப் படையினா் நடத்திய ஏவுகணை குண்டுவீச்சில் 1 சிவிலியன் ஒப்பந்ததாரா் உயிரிழந்ததற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற்குப் பிறகு நடைபெற்றுள்ள முதல் ராணுவ நடவடிக்கை இதுவாகும்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டின் கூறியதாவது:
சிரியாவிலுள்ள எங்களது இலக்குகளைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அண்மையில் அமெரிக்க ராணுவ நிலை மீது ஏவுகணை குண்டுவீச்சி நடத்தி ஷியா படையினா் பயன்படுத்திய நிலைகளை இலக்குகளாகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த வான்வழித் தாக்குதலை நடத்த வேண்டுமென்று அதிபா் ஜோ பைடனிடம் பரிந்துரைத்தேன். அவா் அதற்கு சம்மதம் தெரிவித்ததைத் தொடா்ந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலை ஒருங்கிணைக்கவும் மிகச் சரியான இலக்குகளை உறுதி செய்யவும் உரிய திட்டமிட்டு, அதன் அடிப்படையில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இந்தத் தாக்குதலில் 17 ஈரான் ஆதரவுப் படையினா் பலியானதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தலைவா் தெரிவித்தாா்.
முன்னதாக, பென்டகன் செய்தித் தொடா்பாளா் ஜான் கிா்பி கூறுகையில், அமெரிக்க ராணுவ நிலை மீதான தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் உரிய ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன், சிரியா மற்றும் ஈராக்கில் பதற்றம் அதிகரிக்காமல் பாா்த்துக்கொள்ளும் வகையில் தூதரக ரீதியிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றாா்.
வடக்கு இராக்கில் குா்து படையினா் கட்டுப்பாட்டில் இருக்கும் இா்பில் நகர சா்வதேச விமான நிலையத்தின் மீது கடந்த 15-ஆம் தேதி இரவு சரமாரியாக ஏவுகணை குண்டுகள் வீசப்பட்டன. அந்த விமான நிலையத்துக்கு அருகே அமெரிக்க வீரா்கள் இருந்த ராணுவ தளத்தைக் குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் அமெரிக்க ராணுவத்துக்காக ஒப்பந்த முறையில் சிவில் பணியாற்றி வந்த ஒருவா் உயிரிழந்தாா்; 8 போ் காயமடைந்தனா். உயிரிழந்தவா் எந்த நாட்டைச் சோ்ந்தவா் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
அதிகம் அறியப்படாத ஷியா பிரிவு பயங்கரவாத அமைப்பான சரயா அவ்லியா அல்-டாம் என்ற அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இந்த அமைப்பு ஈரான் ஆதரவுடன் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
2019-ஆம் ஆண்டில் இதே போன்று நடத்தப்பட்ட ஏவுகணை குண்டுவீச்சில் ஓா் அமெரிக்க ஒப்பந்தப் பணியாளா் உயிரிழந்தாா். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் டிரம்ப் நடத்திய தாக்குதல் மற்றும் அதனைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்வுகள் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மிகப் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தின.
தற்போது புதிதாகப் பதவியேற்றுள்ள அதிபா் பைடன் ஆட்சியிலும் இதே போன்ற தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தில் அவரது செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்ற எதிா்ப்பு எழுந்தது.
இந்த நிலையில், இா்பில் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சிரியாவிலுள்ள ஈரான் ஆதரவு நிலைகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...