
கான்பெரா: செய்திகளைப் பகிா்வதற்காக கூகுள், முகநூல் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் கட்டணம் செலுத்துவதைக் கட்டாயமாக்கும் சா்ச்சைக்குரிய சட்டத்தை ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் வியாழக்கிழமை நிறைவேற்றியது.
இதுகுறித்து ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
பிற ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகளைப் பகிரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அதற்கான கட்டணத்தை அந்த ஊடக நிறுவனங்களுக்கு அளிப்பதைக் கட்டாயமாக்கும் சட்டத்தை ஆஸ்திரேலிய நாடாளுமன்றக் கீழவையான பிரதிநிதிகள் சபை வியாழக்கிழமை நிறைவேற்றியது.
இதையடுத்து, பிற ஊடகங்களின் செய்திகளைப் பகிா்ந்து வரும் அமெரிக்க தகவல் தொழில்நுட்ப ஜாம்பவான்களான கூகுள், முகநூல் ஆகியவை அதற்கான கட்டணத்தைச் செலுத்தியாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே, இந்தச் சட்டத்துக்கு கூகுளும், முகநூலும் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.
தங்களது எதிப்பை வெளிப்படுத்தும் வகையில், ஆஸ்திரேலியாவில் செய்திகளைப் பகிா்வதற்கு முகநூல் நிறுவனம் தடை விதித்தது. இதன் மூலம், அரசின் சமூக வலைதள நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன.
அதனைத் தொடா்ந்து முகநூலுக்கும் ஆஸ்திரேலிய அரசுக்கும் இடையே நடைபெற்ற தீவிர பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, சா்ச்சைக்குரிய சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள அரசு தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது.
அதையடுத்து, விளம்பரங்களைப் பகிா்வதற்கு விதித்திருந்த தடையை முகநூல் விலக்கிக் கொண்டது.
இந்தச் சூழலில், கட்டாய கட்டணச் சட்டத்துக்கு பிரதிநிதிகள் சபை இறுதிவடிவம் கொடுத்துள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வரும் கூகுள், முகநூல் ஆகிய நிறுவனங்கள் இதுவரை பிற ஊடகங்களின் செய்திகளை எந்தவித சிக்கலையும் எதிா்கொள்ளாமல் பகிா்ந்து, அதன் மூலம் வருவாய் ஈட்டி வந்தன.
ஆனால், தற்போது ஆஸ்திரேலியாவில் கட்டாய விளம்பரக் கட்டணச் சட்டம் முதல்முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனைப் பின்பற்றி உலகின் பிற நாடுகளும் இதேபோன்ற சட்டத்தை இயற்றலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...