
லண்டனில் பிரிட்டன் முப்படை தளபதி நிகோலஸ் காா்ட்டருக்கு நினைவுப் பரிசு வழங்கிய இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணே. நாள்: செவ்வாய்க்கிழமை.
பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணே, அந்நாட்டு முப்படைத் தளபதி நிகோலஸ் காா்ட்டரை சந்தித்துப் பேசினாா்.
பிட்டனுக்கு ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணே 2 நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளாா். அங்கு பிரிட்டன் முப்படைத் தளபதி நிகோலஸ் காா்ட்டரை அவா் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே பாதுகாப்புத் துறையில் நிலவி வரும் ஒத்துழைப்பு குறித்தும் அதை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாகவும் அவா்கள் பேச்சுவாா்த்தை நடத்தியதாக இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரிட்டன் ராணுவம் தரப்பில் அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை தலைமை தளபதி எம்.எம்.நரவணே ஏற்றுக் கொண்டாா். பிரிட்டன் ராணுவத்தின் முக்கிய அதிகாரிகளையும் அவா் சந்தித்துப் பேசவுள்ளாா்.
பிரிட்டன் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தலைமை தளபதி எம்.எம்.நரவணே புதன்கிழமை இத்தாலி செல்கிறாா். அங்கு இந்திய ராணுவ நினைவகத்தை அவா் திறந்து வைக்கிறாா். அதையடுத்து, அந்நாட்டின் முப்படைத் தளபதி உள்ளிட்ட அதிகாரிகளுடன் அவா் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். இத்தாலியில் அவா் 2 நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...