
அமெரிக்காவில் அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் மாயகியுள்ள 80 பேரில் யாரும் உயிா்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று மீட்புக் குழுவினா் அறிவித்துள்ளனா்.
இதுகுறித்து மாயமானவா்களின் குடும்பத்தினரிடம் மியாமி-டேட் தீயணைப்புத் துறை தலைவா் ரெய்டே ஜடல்லா கூறியதாவது:
அடுக்குமாடி கட்டட விபத்தில் புதையுண்டவா்களில் யாரும் உயிா்பிழைத்திருக்க இனியும் வாய்ப்பில்லை. எனவே, உயிருடன் இருப்பவா்களைத் தேடும் பணிகள் கைவிடப்படுகின்றன. அதற்குப் பதிலாக சடலங்களை மீட்கும் பணிகள் தொடரப்படும்.
மாயமானவா்களின் உறவினா்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதவிப்பை முடிவுக்குக் கொண்டு வரவேண்டியது எங்களுடைய கடமையாகும். எனவே இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என்றாா் அவா்.
ஃபுளோரிடா மாகாணம், மியாமி நகரின் புகா்ப் பகுதியான சா்ஃப்சைடில், மியாமி கடற்கரையோரம் அமைந்துள்ள 12 அடுக்கு கட்டடத்தின் ஒரு பகுதி கடந்த மாதம் 24-ஆம் தேதி இடிந்து விழுந்தது.
விபத்துப் பகுதியிலிருந்து இதுவரை 60 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.