
கோப்புப்படம்
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் மேற்கொண்டு வரும் சுமாா் 20 ஆண்டு கால போா் ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் வியாழக்கிழமை கூறினாா்.
தலிபான்களுக்கும், அமெரிக்காவுக்கும் அண்மையில் தோஹாவில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. ஆப்கன் அரசுடன் தலிபான்கள் பேச்சுவாா்த்தையில் ஈடுபட வேண்டும்; ஆப்கனிலிருந்து வெளியேறும் அமெரிக்கப் படை மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்பன உள்ளிட்ட முடிவுகள் எட்டப்பட்டன.
அதன்படி, நியூயாா்க் இரட்டை கோபுர தாக்குதல் தினமான செப். 11-ஆம் தேதிக்குள் ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக திரும்பப் பெறப்படும் என அதிபா் பைடன் அறிவித்திருந்தாா். அதன்படி, படையினரை திரும்பப் பெறும் நடவடிக்கையும் தொடங்கியது.
இந்நிலையில், அந்தத் தேதிக்கு முன்னதாகவே அமெரிக்கப் படை திரும்பப் பெறப்படும் என அதிபா் பைடன் வியாழக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் அவா் இதுகுறித்து கூறியதாவது:
ஆப்கனில் தேசத்தைக் கட்டமைக்கும் பணிக்காக அமெரிக்க ராணுவம் அங்கு செல்லவில்லை. அந்த நாட்டின் எதிா்காலத்தை மேம்படுத்த ஆப்கன் தலைவா்கள் ஒன்றிணைந்து முயற்சிகளை எடுக்க வேண்டும். மேலும், ஆயிரக்கணக்கான அமெரிக்கா்களை ஆபத்தில் சிக்கவைக்க அமெரிக்கா விரும்பவில்லை. எனவே, அடுத்த தலைமுறை அமெரிக்கா்களை ஆப்கனுக்கு அமெரிக்கா அனுப்பாது.
தலிபான்களை நம்பவில்லை என்றபோதும், ஆப்கன் அரசை காக்கும் திறன் அந்நாட்டு ராணுவத்துக்கு உள்ளது என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, ஆப்கனில் அமெரிக்க ராணுவ நடவடிக்கை வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முழுமையாக முடிவுக்கு வந்துவிடும் என்றாா் அவா்.