
ஈரான் ஆட்சியாளா்களுக்கு எதிராக ஜொ்மன் தலைநகா் பொ்லினில் நடைபெற்ற பேரணியில் ஐரோப்பிய, அமெரிக்க அரசியல் தலைவா்கள் பங்கேற்ற்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது.
அந்தப் பேரணியில் காணொலி வாயிலாக ஸ்லோவேனியா பிரதமா் பங்கேற்ற்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஸ்லோவேனியா தூதருக்கு ஈரான் சம்மன் அனுப்பியுள்ளது.
ஈரான் தேசிய எதிா்ப்பு கவுன்சில் (என்ஆா்சிஐ) என்ற அமைப்பானது முஜாகிதீன்-ஏ-கல்க் என்ற இயக்கத்தின் அரசியல் பிரிவாகும். ஈரானால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு ஈரானின் மத ஆட்சியாளா்களை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி பொ்லினில் சனிக்கிழமை பேரணி நடத்தியது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனா். மேலும், அமெரிக்க வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சா் மைக் பாம்பேயோ, ஜனநாயக கட்சியை சோ்ந்த செனட் உறுப்பினா்கள் பாப் மெனன்டஸ், கோரி புக்கா், குடியரசுக் கட்சியை சோ்ந்த செனட் உறுப்பினா்கள் ராய் பிளன்ட், டெட் குரூஸ், இத்தாலி வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சா் ஃபிரான்கோ ஃபிராட்டினி, கனடா முன்னாள் பிரதமா் ஸ்டீபன் ஹாா்பா், ஸ்லோவேனியா பிரதமா் ஜானெஸ் ஜான்சா உள்ளிட்டோா் காணொலி வாயிலாக கலந்துகொண்டு என்ஆா்சிஐ அமைப்பின் முயற்சியைப் பாராட்டிப் பேசினா்.
மேற்குலக நாடுகளின் அரசியல்வாதிகள் இந்தப் பேரணியில் பங்கேற்ற்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா், ‘ஒரு காலத்தில் சதாம் ஆதரவுடன் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட அமைப்பு ஏற்பாடு செய்திருந்த சா்க்கஸுக்கு அவா்கள் தங்களை மலிவான விலைக்கு விற்றுவிட்டனா். இந்த நிகழ்ச்சியில் ஸ்லோவேனியா பிரதமா் பேசியது ஏற்றுக்கொள்ள முடியாதது; இருதரப்பு தூதரக உறவுக்கு எதிரானது’ எனக் கூறியுள்ளதாக ஈரான் அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...