மூக்கின்வழி செலுத்தப்படும் கரோனா தடுப்பு மருந்துக்கு நல்ல பலன்!

மூக்கின் வழியாக செலுத்தப்படும் கரோனா தடுப்பு மருந்து முற்றிலும் பாதுகாப்பானது மட்டுமல்லாமல்,  பரவுதையும் தடுக்கும் என சமீபத்திய ஆய்வில் தகவல். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மூக்கின் வழியாக செலுத்தப்படும் கரோனா தடுப்பு மருந்து முற்றிலும் பாதுகாப்பானது மட்டுமல்லாமல், பரவுதையும் தடுக்கும் என சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. 

சயின்ஸ் அட்வான்சஸ் என்ற அமெரிக்க பத்திரிகையில் ஆய்வுக் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. இந்தக் கட்டுரையில் எலி போன்ற சிறிய வகை உயிரினங்களுக்கு கரோனா தடுப்பு மருந்தை மூக்கில் தெளிக்கும் முறை மிகவும் பாதுகாப்பானது என குறிப்பிடப்பட்டுள்ளது. இது பொதுவாக இன்ஃபுளூயென்சா என்ற வைரஸிற்கு பயன்படுத்தும் முறையைப் போன்றது என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ஜார்ஜியா பல்கலைக்கழக பேராசிரியர் பால் மெக்ரே, ''தற்போது பயன்பாட்டில் இருக்கும் கரோனா தடுப்பு மருந்துகள் வெற்றிகரமாக  செயல்புரிந்து வருகின்றன. ஆனால் உலக அளவில் பெரும்பான்மையான மக்களுக்கு இன்னும் தடுப்பு மருந்துகள் கிடைக்கவில்லை. தற்போது நிலவும் கடினமான காலகட்டத்தில் இலகுவாக கிடைக்கக் கூடியதும், வீரியமாக செயலாற்றக்கூடியதுமான தடுப்பு மருந்துகள் தேவை. 

மூக்கின் வழியாக செலுத்தப்படும் இந்த புதிய வகை கரோனா தடுப்பு மருந்து மக்களுக்கு நல்ல பலனை அளித்து வருகிறது. இதன் காரணமாக கரோனா வைரஸ் பரவுவது தடுக்கப்படும் எனவும், தற்போது உலக அளவில் நிலவும் துயரமான காலகட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் இந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகை தடுப்பு மருந்தை முதல் தவணை எடுத்துக்கொண்டாலே போதுமான பலனைத் தரக்கூடியது. மேலும் இந்த வகை மருந்தை குறைந்தது 3 மாதங்கள் வரை பயன்படுத்த முடியும்''  என்றார்.

மேலும் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தின் மற்றொரு  பேராசிரியர் பியோ ஹீ என்பவர், இந்த புதிய வகை கரோனா தடுப்பு மருந்தானது, வைரஸில் இருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், எளிதில் பரவுவதையும் தடுப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த புதிய கரோனா தடுப்பு மருந்து  கரோனா வகையைச் சேர்ந்த மெர்ஸ் எனப்படும் மிக ஆபத்தான வைரஸில் இருந்து விலங்குகளை பாதுகாக்கிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது. நுரையீரல் மற்றும் பிற  உறுப்புகளில் ஆழமாகப் பரவி மிகவும் ஆபத்தான பாதிப்பை  மெர்ஸ் வைரஸ் ஏற்படுத்தும். 

மேலும், இந்த வைரஸ் தாக்கியவர்கள் விடும் மூச்சுக்காற்று மூலம் மற்றவர்களுக்கும் பரவும். இந்த நிலையில் மூக்கின் வழி செலுத்தப்படும் தடுப்பு மருந்து,  உயிரனங்களை முழுமையாக பாதுகாப்பதோடு, மற்ற  உயிரினங்களுக்கு பரவுவதையும் முற்றிலும் தடுக்கிறது என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com