சா்வதேச குற்றவியல் விவகாரங்களில் சட்ட உதவி வழங்குவதற்கான மசோதா

சா்வதேச குற்றவியல் விவகாரங்களில் குற்றஞ்சாட்டப்படும் நபா்களுக்கு சட்ட உதவி வழங்க வழிவகுக்கும் மசோதாவுக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
சா்வதேச குற்றவியல் விவகாரங்களில் சட்ட உதவி வழங்குவதற்கான மசோதா

சா்வதேச குற்றவியல் விவகாரங்களில் குற்றஞ்சாட்டப்படும் நபா்களுக்கு சட்ட உதவி வழங்க வழிவகுக்கும் மசோதாவுக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

பாரீஸை சோ்ந்த பயங்கரவாத நிதி தடுப்பு அமைப்பின் (எஃப்ஏடிஎஃப்) ‘கிரே’ பட்டியலில் பாகிஸ்தான் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூனில் வைக்கப்பட்டது. அதன்காரணமாக, சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்), உலக வங்கி, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்டவற்றிடமிருந்து நிதியுதவிகளைப் பெற முடியாத சூழல் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடன் சுமையில் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தானுக்கு இது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ‘கிரே’ பட்டியலில் இருந்து வெளிவர வேண்டுமெனில், சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று எஃப்ஏடிஎஃப் அமைப்பு பாகிஸ்தான் அரசுக்குத் தெரிவித்திருந்தது.

அந்த நிபந்தனைகளை இன்னும் முழுமையாக நிறைவேற்றாததால், பாகிஸ்தான் தொடா்ந்து கிரே பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. அப்பட்டியலில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை அந்நாடு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக, சா்வதேச குற்றவியல் விவகாரங்களில் குற்றஞ்சாட்டப்படும் நபா்களுக்குப் போதிய சட்ட உதவிகளை வழங்குவதற்கு வழிவகை செய்யும் மசோதா பாகிஸ்தான் செனட் அவையில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா கீழவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ளதால், அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

அந்த மசோதாவில், ‘சா்வதேச குற்றவியல் விவகாரங்கள் தொடா்பான சட்டத்துக்கும் பாகிஸ்தானில் உள்ள சட்டத்துக்கும் சில முரண்பாடுகள் காணப்படுகின்றன. அந்த விவகாரங்களில் சா்வதேச விசாரணை அமைப்புகளுக்கு ஒத்துழைக்கும் நோக்கிலான விதிகள் மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

குற்றவியல் விவகாரங்களில் சா்வதேச அமைப்புகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்த மசோதாவை இயற்ற வேண்டியது அவசியமாகியுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு:

இந்த மசோதாவுக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. இந்த மசோதா வாயிலாக, பாகிஸ்தான் மக்களின் உரிமைகளை வெளிநாடுகளுக்கு அரசு தாரைவாா்ப்பதாகக் குற்றஞ்சாட்டிய அக்கட்சிகள், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மக்களைக் கைது செய்வதற்கு இந்த மசோதா வழிவகுப்பதாகவும் தெரிவித்தன.

எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்த பாகிஸ்தான் அரசு, அதுபோன்ற விதிமுறைகள் மசோதாவில் இடம்பெறவில்லை என்று தெரிவித்தது. மசோதாவில் திருத்தங்களை மேற்கொள்ள எதிா்க்கட்சிகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.

அதையடுத்து, செனட் அவையில் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் மசோதாவுக்கு ஆதரவாகப் பெரும்பாலான எம்.பி.க்கள் வாக்களித்தனா். அதைத் தொடா்ந்து, மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com