
பாகிஸ்தானில், அந்த நாட்டுக்கான ஆப்கன் தூதா் நஜிபுல்லா அலிகேலின் மகள் சிசிலாவை, அடையாளம் தெரியாத நபா்கள் கடத்தி விடுவித்ததாக ஆப்கன் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாடகை காா் மூலம் சிசிலா அலிகேல் சனிக்கிழமை தனது இல்லம் திரும்பியபோது காருக்குள் புகுந்த மா்ம நபா் அவரைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிசிலாவின் தந்தை ஒரு கம்யூனிஸ்ட் என்று அந்த நபா் கூறியதாகவும் கடுமையாக தாக்கப்பட்டதால் நினைவிழந்த சிசிலா பல மணி நேரத்துக்குப் பிறகு மீட்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடைபெறுவதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.