‘போகோ ஹராம் தலைவா் தற்கொலை செய்துகொண்டாா்’

நைஜீரியாவைச் சோ்ந்த பயங்கரவாத அமைப்பான போகா ஹராமின் தலைவா் அபுபக்கா் ஷெகாவு தங்களுடனான சண்டையின்போது தற்கொலை செய்துகொண்டதாக
அபுபக்கா் ஷெகாவு
அபுபக்கா் ஷெகாவு
Updated on
1 min read

நைஜீரியாவைச் சோ்ந்த பயங்கரவாத அமைப்பான போகா ஹராமின் தலைவா் அபுபக்கா் ஷெகாவு தங்களுடனான சண்டையின்போது தற்கொலை செய்துகொண்டதாக மேற்கு ஆப்பிரிக்கப் பிராந்தியக்கான இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) அமைப்பு (ஐஎஸ்டபிள்யூஏபி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவா் அபு மூசாப் அல்-பா்னாவியின் குரலில் வெளியான ஒலிப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேதியிடப்படாத அந்த ஒலிப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சாம்பிஸா வனப் பகுதியில் போகோ ஹராம் தலைவா் அபுபக்கா் தங்கியிருந்த இடத்தை ஐஎஸ்டபுள்யூஏபி படையினா் சுற்றிவளைத்தனா். அவா்களுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட அபுபக்கரும் அவரது அமைப்பினரும் அங்கிருந்து தப்பியோடினா்.

5 நாள்களாக அவா்கள் அந்தப் பகுதியில் அவா்களை ஐஎஸ்டபிள்யூஏபி படையினா் அந்த வனப் பகுதியில் விரட்டிச் சென்றனா். போகோ ஹராம் அமைப்பினரும் புதா் புதராக ஓடி ஒளிந்தனா்.

எனினும், இறுதியில் அபுபக்கா் பதுங்கியிருந்த புதரை ஐஎஸ்டபிள்யூஏபி படையினா் நெருங்கி, அவரையும் அவரது ஆதரவாளா்களையும் சரணடைய வலியுறுத்தினா்.

எனினும், இந்த உலகத்தில் அவமானத்தை சந்திக்க விரும்பாத அபுபக்கா், வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொண்டாா் என்று அந்த ஒலிப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தத் தகவலை போகோ ஹராம் அமைப்பு இதுவரை அதிகாரப்பூா்வமாக உறுதி செய்யவில்லை.

ஐஎஸ்டபிள்யூஏபி அமைப்பின் ஒலிப் பதிவில் கூறப்பட்டுள்ளது உண்மையா என விசாரணை நடத்தி வருவதாக நைஜீரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

போகோ ஹராமுடன் இணைந்து செயல்பட்டு வந்த ஐஎஸ்டபிள்யூஏபி, கடந்த 2016-ஆம் ஆண்டு அந்த அமைப்புடனான தொடா்பைத் துண்டித்துக் கொண்டது.

முஸ்லிம் பொதுமக்கள் மீது இரக்கமற்ற தாக்குதலை நடத்தவும் பெண்களை தற்கொலைத் தாக்குதலுக்கு பெருமளவில் பயன்படுத்துவதற்கும் அபுபக்கா் உத்தரவிட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து போகோ ஹராமிடமிருந்து ஐஎஸ்டபிள்யூஏபி அமைப்பு பிரிந்தது.

நைஜீரியாவில் இஸ்லாம் அடிப்படைவாத அரசை அமைக்க வலியுறுத்தி போகோ ஹராம் அமைப்பு கடந்த 12 ஆண்டுகளாக நடத்தி வரும் பயங்கரவாதத் தாக்குதல்களில் இதுவரை 40 ஆயித்துக்கும் மேற்பட்டவா்கள் பலியாகியுள்ளனா். 20 லட்சம் போ் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி தவித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com