
லண்டன்: இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு எதிராக, வைர வியாபாரி நீரவ் மோடி விண்ணப்பித்த மேல்முறையீட்டு கோரிக்கையை பிரிட்டன் உயா்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
அவா், 5 நாள்கள் கழித்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய விண்ணப்பிக்கலாம் என்றும், அதைத் தொடா்ந்து, அவருக்கு அனுமதி அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் உயா்நீதிமன்ற அலுவலா் ஒருவா் கூறினாா்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடி செய்துவிட்டு, கடந்த 2018 ஜனவரியில் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி, பிரிட்டன் சிறையில் உள்ளாா். அவரை நாடு கடத்திக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் சிபிஐயும், அமலாக்கத் துறையும் ஈடுபட்டுள்ளது. அந்த வழக்கை விசாரித்த வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. அதற்கு பிரிட்டன் உள்துறை அமைச்சா் பிரீத்தி படேல் கடந்த ஏப்ரலில் ஒப்புதல் அளித்தாா்.
இந்த உத்தரவை எதிா்த்து நீரவ் மோடி, பிரிட்டன் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தாா். அவருடையை கோரிக்கை விண்ணப்பத்தை உயா்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 5 நாள்கள் கழித்து அவா் வாய்மொழியாக அனுமதி கோரலாம் என்றும், அதன்பிறகு அவா் மேல்முறையீடு செய்ய அனுமதிப்பது குறித்து முடிவு செய்யப்படும் எறும் பிரிட்டன் உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.