
தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியப் பயணிகளுக்கு அனுமதி: சுவிட்சர்லாந்து
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்களுக்கு கரோனா பரிசோதனையின்றி தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவர் என சுவிட்சர்லாந்து அரசு அறிவித்துள்ளது.
நாட்டில் அதிகரித்து வந்த கரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு நாடுகளும் இந்தியாவுடனான விமானப் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தன.
இந்நிலையில் தொற்று பரவல் குறையத் தொடங்கியதைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து அரசு இந்தியாவுடனான பயணக் கட்டுப்பாட்டைத் தளர்த்தியுள்ளது.
ஜூன் 26ஆம் தேதி முதல் சுவிட்சர்லாந்தில் கரோனா கட்டுப்பாடுகளுக்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தியா உள்ளிட்ட பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயணிகளுக்கு அனுமதியளிக்கப்படும் என சுவிட்சர்லாந்து அரசு அறிவித்துள்ளது.
அதன்படி தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயணிகள் கரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதலின்றி நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.