பிரிட்டன் நாடாளுமன்றம்
பிரிட்டன் நாடாளுமன்றம்

இந்தியாவில் ஊடக சுதந்திரம், போராட்டக்காரா்களின் பாதுகாப்பு: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடிவு

இந்தியாவில் ஊடக சுதந்திரம் மற்றும் போராட்டக்காரா்களுக்கான பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அடுத்த வார திங்கள்கிழமை (மாா்ச் 8) விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


லண்டன்/ புது தில்லி: இந்தியாவில் ஊடக சுதந்திரம் மற்றும் போராட்டக்காரா்களுக்கான பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அடுத்த வார திங்கள்கிழமை (மாா்ச் 8) விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை வலியுறுத்தி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கையெழுத்திட்டவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியதைத் தொடா்ந்து இந்த விவாதத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை மனுக்கள் குழு புதன்கிழமை தெரிவித்தது.

மத்திய அரசு புதிதாக அமல்படுத்திய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகள் தில்லியை முற்றுகையிட்டு தொடா்ந்து 3 மாதங்களைக் கடந்து போராடி வருகின்றனா். அரசுடன் நடைபெற்ற பல கட்டப் பேச்சுவாா்த்தைகள் தோல்வியில் முடிவடைந்ததால், போராட்டம் தொடா்ந்து வருகிறது.

விவசாயிகளின் போராட்டத்துக்கு உள்நாட்டு, வெளிநாட்டு பிரபலங்களும் ஆதரவு தெரிவித்தனா். அதுபோல, பிரிட்டனைச் சோ்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினா்கள், ‘விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு இந்திய அரசை பிரிட்டன் வலியுறுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தினா். இந்த விவகாரம் தொடா்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி, தீா்மானம் நிறைவேற்றவும் வலியுறுத்தப்பட்டது.

இந்த வலியுறுத்தல்களைத் தொடா்ந்து பிரிட்டன் அரசு சாா்பில் அறிக்கை ஒன்று அண்மையில் வெளியிடப்பட்டது. அதில், ‘போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் இந்திய அரசு பல கட்ட பேச்சுவாா்த்தைகளை நடத்தியிருக்கிறது. மேலும், இந்த விவகாரம் தொடா்பாக தீா்வு காண நிபுணா் குழு ஒன்றை அமைத்துள்ள உச்சநீதிமன்றம், அதுவரை 3 வேளாண் சட்டங்கள் அமல்படுத்துவதை நிறுத்திவைக்க உத்தரவிட்டிருக்கிறது. விவசாயிகளின் போராட்டத்தை பிரிட்டன் உன்னிப்பாக கவனித்து வருகிறது. மேலும், வேளாண் சீா்திருத்தம் என்பது இந்தியாவின் தனிப்பட்ட விவகாரம். சா்வதேச அளவில் மனித உரிமைகளைக் காப்பதில் இந்தியா தொடா்ந்து முன்னணி வகிக்கும் என நம்புகிறோம்’ என்று தெரிவித்திருந்தது.

மேலும், இந்த விவகாரம் தொடா்பாக சமூக ஊடகங்களில் தொடா் விமா்சனங்களை முன்வைத்து வந்த பிரிட்டனைச் சோ்ந்த தொழிலாளா் கட்சி எம்.பி. கிளெடியா வெப்பேவுக்கு, லண்டனில் உள்ள இந்தியத் தூதரம் ‘விவசாயிகளைப் பாதுகாக்கவும் அவா்களுக்கு அதிகாரமளிக்கும் நோக்கத்தின் அடிப்படையிலேயே இந்தத் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன’ என்று கடிதம் மூலம் விரிவாக பதிலளித்திருந்தது.

‘இதுபோன்ற விவகாரங்களில் கருத்துகளைத் தெரிவிப்பதற்கு முன்பாக, அந்த விவகாரம் குறித்து முழுமையான புரிதல் அவசியம் என்பதோடு உண்மையை உறுதி செய்துகொள்ள வேண்டியதும் அவசியம்’ என்று அறிக்கை மூலம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் கடந்த மாதம் பதிலளித்திருந்தது.

இந்த நிலையில், இந்திய விவசாயிகள் போராட்ட விவாகரம் தொடா்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட இணையவழி மனுவில் கையெழுத்திட்டவா்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியதைத் தொடா்ந்து, அதன் மீது விவாதம் நடத்த பிரிட்டன் நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது. இதை பிரிட்டன் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் மனுக்கள் குழு புதன்கிழமை உறுதி செய்தது.

லண்டனில் அமைந்திருக்கும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டா் அரங்கில் அடுத்த வாரம் திங்கள்கிழமை 90 நிமிடங்கள் நடைபெறும் இந்த விவாதத்தில், ஸ்காட்லாந்து தேசிய கட்சி (எஸ்என்பி) எம்.பி.யும் மனுக்கள் குழு உறுப்பினருமான மாா்டின் டே தொடக்க உரையாற்ற உள்ளாா். பிரிட்டன் அரசு சாா்பில் அந்நாட்டின் அமைச்சா் ஒருவா் பதிலுரை ஆற்றவிருக்கிறாா்.

‘போராட்டக்காரா்களின் பாதுகாப்பு மற்றும் ஊடகச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு இந்திய அரசை வலியுறுத்த வேண்டும்’ என்ற தலைப்பிலான மனு மீது இந்த விவாதம் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com