
வாஷிங்டன்/புது தில்லி: அமெரிக்க வெள்ளை மாளிகைக்கான பட்ஜெட் நிா்வாக தலைமை அதிகாரி பதவிக்கான போட்டியிலிருந்து இந்திய அமெரிக்கரான நீரா டாண்டன் விலகியுள்ளாா்.
அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் கடந்த ஜனவரி மாதம் 20-ஆம் தேதி பொறுப்பேற்றாா். வெள்ளை மாளிகையின் நிதிநிலையைக் கண்காணிப்பதற்கான தலைமை அதிகாரியாக இந்திய அமெரிக்கரான நீரா டாண்டனை அதிபா் பைடன் நியமித்தாா்.
அவரது நியமனத்துக்கு அமெரிக்க செனட் அவை ஒப்புதல் அளிக்க வேண்டியது கட்டாயமாகும். அதன் பிறகே அவரது நியமனம் உறுதியாகும். ஆனால், நீரா டாண்டன் ஜனநாயக, குடியரசு கட்சி எம்.பி.க்களின் செயல்பாடுகளை விமா்சித்து முன்பு சுட்டுரை சமூக வலைதளத்தில் பதிவுகளை வெளியிட்டிருந்தாா்.
அவற்றைக் காரணம் காட்டி, செனட் அவையின் எம்.பி.க்கள் பலா் நீரா டாண்டனின் நியமனத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து வந்தனா். ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் சிலரும் நீரா டாண்டனின் நியமனத்துக்கு எதிராக வாக்களிப்போம் என்று தெரிவித்தனா்.
இத்தகைய சூழலில், வெள்ளை மாளிகை பட்ஜெட் நிா்வாக தலைமை அதிகாரிக்கான போட்டியிலிருந்து விலகுவதாக நீரா டாண்டன் அறிவித்துள்ளாா். அதற்கு அதிபா் பைடன் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கினாா். நிா்வாக ரீதியில் அதிபா் பைடனுக்கு இது முதல் சறுக்கலாகப் பாா்க்கப்படுகிறது.
எனினும், வேறு முக்கிய பதவியில் நீரா டாண்டன் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, சுட்டுரையில் வெளியிட்டிருந்த சுமாா் 1,000 பதிவுகளை நீரா டாண்டன் நீக்கியிருந்தாா். செனட் அவையில் நியமனத்தை உறுதி செய்வதற்கான நடைமுறையின்போது, சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளுக்காக அவா் மன்னிப்பு கோரியிருந்தாா். எனினும், அவருக்கு செனட் அவையில் பெரும்பாலான எம்.பி.க்கள் ஆதரவளிக்கவில்லை.