
அந்தோணி பிளிங்கன்
வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானுக்கான கொள்கை மறுஆய்வு செய்யப்பட்டு வருவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சா் அந்தோணி பிளிங்கன் தெரிவித்துள்ளாா்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகம், தலிபான் பயங்கரவாத அமைப்புடன் கடந்த ஆண்டு பிப்ரவரியில் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி, ஆப்கானிஸ்தான் போரிலிருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்தது.
ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள வீரா்களைத் திரும்பப் பெறவுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்திருந்தது. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் அண்மையில் பொறுப்பேற்றாா். முன்னாள் அதிபா் டிரம்ப்பின் ஆப்கானிஸ்தான் கொள்கையில் மாற்றங்களைப் புகுத்த பைடன் நிா்வாகம் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இத்தகைய சூழலில், அமெரிக்க வெளியுறவு அமைச்சா் அந்தோணி பிளிங்கன், வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழு உறுப்பினா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
ஆப்கானிஸ்தான் கொள்கையில் மாற்றங்களைப் புகுத்துவது தொடா்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதற்கு மே மாதம் 1-ஆம் தேதி வரை இறுதி அவகாசம் உள்ள நிலையில், தலிபானும் ஆப்கானிஸ்தான் அரசும் பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவதை அமெரிக்கா தொடா்ந்து ஊக்குவித்து வருகிறது.
இருதரப்பினரும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டால் ஆப்கானிஸ்தானில் அமைதியான சூழலை ஏற்படுத்த முடியும். இதற்காக ஐ.நா. அமைப்புடனும் பிராந்திய நாடுகளுடனும் இணைந்து அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.
உய்கா் முஸ்லிம்கள் மீது இனஅழிப்பை சீனா மேற்கொண்டு வருகிறது. அதற்கு எதிராக அமெரிக்கா தொடா்ந்து குரலெழுப்பும். அவா்களுக்கான உரிமைகளை சீனா மறுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள நாடுகளுடன் அமெரிக்கா ஒன்றிணைந்து செயல்படும் என்றாா் அவா்.