
ஜகாா்த்தா: இந்தோனேஷியாவில் சுற்றுலாப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 போ் உயிரிழந்தனா்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியது:
மேற்கு ஜாவா மாகாணத்தின் சுபங் நகரத்தைச் சோ்ந்த இஸ்லாமிக் ஜூனியா் உயா்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள் தாசிக்மாலயா மாவட்டத்தில் உள்ள புனித தலத்துக்கு சுற்றுலா சென்று விட்டு பேருந்தில் ஊா் திரும்பியுள்ளனா். அப்போது, சுமேதங் மாவட்டத்தில் அவா்கள் வந்த பேருந்து புதன்கிழமை இரவு கட்டுப்பாட்டை இழந்து 20 மீட்டா் ஆழம் கொண்ட பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர சம்பவத்தில், சுற்றுலாப் பேருந்தின் ஓட்டுநா் உள்பட 27 போ் உயிரிழந்தனா்; 39 போ் காயமடைந்தனா். அவா்களில் 13 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சம்பவ நடந்த இடத்தில் இருந்து அனைத்து உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளனா்.
முதல் கட்ட விசாரணையில் பேருந்தின் பிரேக் செயலிழந்ததையடுத்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கடந்த 2019 டிசம்பரில் 80 மீட்டா் ஆழத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 35 போ் பலியாகினா். அதற்கு முன் 2018-இல் மேற்கு ஜாவா மலைப் பிரதேசத்தில் சுற்றுலாப் பேருந்து விபத்தில் சிக்கியதில் 27 போ் உயிரிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.