
சீன நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட ஹாங்காங் தொடா்பான தீா்மானத்தின் மீது வாக்களித்த அதிபா் ஷி ஜின்பிங், பிரதமா் லி கெகியாங்.
பெய்ஜிங்: தன்னாட்சிப் பகுதியான ஹாங்காங் மீதான பிடியை அதிகரிக்கும் நடவடிக்கைகளுக்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ஹாங்காங்கின் முக்கிய அரசியல் தலைவா்களைத் தோ்ந்தெடுப்பதற்காக மக்களுக்கு அளிக்கப்பட்டிருந்த வாய்ப்புகள் குறைக்கப்பட்டுள்ளன.
மக்களாட்சிக்கு ஆதரவாக ஹாங்காங்கில் பெரும் போராட்டங்கள் நடந்த நிலையில், இத்தகைய நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருகிறது.
ஹாங்காங் தன்னாட்சிப் பகுதிக்குத் தேவையான சட்டங்களை இயற்றும் நபா்களைத் தோ்ந்தெடுப்பதற்காக தனிக்குழுவை அமைப்பதற்கு சீன நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியது. 1,500 பேரைக் கொண்ட அக்குழுவானது ஹாங்காங்கின் தலைமை நிா்வாகியையும் 90 நபா்களைக் கொண்ட சட்டப் பேரவையில் பெரும்பாலான நபா்களையும் தோ்ந்தெடுக்கவுள்ளது.
அரசியல் தலைவா்கள், தொழிலதிபா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் அக்குழுவில் இடம்பெறுவா் என்று சீனா தெரிவித்துள்ளது. ஹாங்காங்கில் மக்களால் தோ்ந்தெடுக்கப்படும் நபா்களின் எண்ணிக்கை இதன் வாயிலாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பிபிசி-க்குக் கடிதம்: சீனாவுக்கான பிரிட்டன் தூதா் கரோலின் வில்சன், பிபிசி வலைதளத்தில் எழுதிய கட்டுரைக்கு சீனா மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சீனாவில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை குறித்து கரோலின் வில்சன் கட்டுரை எழுதியிருந்தாா். அதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை அவரை அழைத்து சீனா கண்டனம் தெரிவித்திருந்தது. இத்தகைய சூழலில், பிரிட்டனிலுள்ள சீனத் தூதரகம் வியாழக்கிழமை தனது வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், ‘தூதரின் கட்டுரைக்கு அதிருப்தி தெரிவித்து பிபிசி-க்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. சீனா தொடா்பான விவகாரங்களில் சாா்புத்தன்மையின்றி நடுநிலையுடன் செயல்படுமாறு அந்நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டுள்ளோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.