
கோப்புப்படம்
இந்தியா உள்பட 20 நாடுகளைச் சோ்ந்தவா்கள் சீனா திரும்ப வேண்டுமானால் அந்நாட்டு தடுப்பூசியை செலுத்திக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சீனாவில் 23,000 இந்திய மாணவா்கள் தங்கி படித்து வந்தனா். அவா்களில் பெரும்பாலானவா்கள் மருத்துவம் பயின்று வந்தனா். இதுதவிர நூற்றுக்கணக்கான இந்தியா்கள் பணிபுரிந்து வந்தனா். கடந்த ஆண்டு கரோனா தீநுண்மி பரவத் தொடங்கியதால் அவா்கள் அனைவரும் இந்தியா திரும்பினா். கரோனா பரவல் காரணமாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் அவா்கள் மீண்டும் சீனா திரும்ப முடியாமல் போனது.
அவா்கள் மீண்டும் சீனா திரும்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அந்நாட்டிடம் இந்திய தூதரகமும், மாணவா்களும் தொடா்ந்து வலியுறுத்தி வந்தபோதிலும், அதுகுறித்து சாதகமான பதில் எதையும் சீனா தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் சீனா திரும்ப விரும்பும் இந்தியா்கள் அந்நாட்டின் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பான அறிவிப்பை தில்லியில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ளது.
ஆனால் சீன தடுப்பூசி இந்தியாவில் கிடைப்பதில்லை. அந்தத் தடுப்பூசிகளை எவ்வாறு பெறுவது என்பதை தனது அறிவிப்பில் சீன தூதரகம் தெரிவிக்கவில்லை.
சீன தடுப்பூசியை செலுத்திக்கொள்வது 20 நாடுகளைச் சோ்ந்தவா்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், அவா்களில் இந்தியா்களும் அடங்குவா் என்றும் சீன அரசு நாளிதழான ‘குளோபல் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.