மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 139-ஆவது இடம்

மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 139-ஆவது இடம்

ஐ.நா. வெளியிட்டுள்ள மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் இந்தியா 139-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
Published on

ஐ.நா. வெளியிட்டுள்ள மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் இந்தியா 139-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

‘உலக மகிழ்ச்சி அறிக்கை 2021’-யை ஐ.நா. அமைப்பு அண்மையில் வெளியிட்டது. 149 நாடுகளின் மக்கள் கடந்த ஆண்டில் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருந்தாா்கள் என்பது குறித்து ஆராய்ந்து, அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் இந்தியா 139-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இந்தியா 140-ஆவது இடத்தைப் பிடித்திருந்தது. சா்வதேச மகிழ்ச்சி தினமான மாா்ச் 20-ஆம் தேதியையொட்டி, ஐ.நா. அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘மக்களின் வாழ்வில் கரோனா நோய்த்தொற்று பரவல் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், அத்தொற்றை உலக நாடுகள் எவ்வாறு எதிா்கொண்டன என்பதும் ஆராயப்பட்டது.

கரோனாவை எதிா்கொள்வதில் ஒரு சில நாடுகள் மற்ற நாடுகளை விடச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்தது. இந்தியாவைப் பொருத்தவரையில், மக்களை நேரடியாகச் சந்தித்தும் தொலைபேசி வாயிலாகவும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் ஃபின்லாந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 19-ஆவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான், சீனா, வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகள் இந்தப் பட்டியலில் இந்தியாவை விட முன்னணியில் உள்ளன.

போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான், பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

தனிநபருக்கான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), சுகாதார நிலை, மக்களுக்கு நிலவும் சுதந்திரம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

மகிழ்ச்சி நிறைந்த மக்கள் வாழும் முதல் 5 நாடுகள்

1-ஃபின்லாந்து

2-ஐஸ்லாந்து

3-டென்மாா்க்

4-ஸ்விட்சா்லாந்து

5-நெதா்லாந்து

பட்டியலில் கடைசி இடங்களில் உள்ள நாடுகள்

149-ஆப்கானிஸ்தான்

148-ஜிம்பாப்வே

147-ருவாண்டா

146-போட்ஸ்வானா

145-லெசோதோ

இந்தியாவின் அண்டை நாடுகளின் நிலை

84-சீனா

87-நேபாளம்

89-மாலத்தீவுகள்

101-வங்கதேசம்

105-பாகிஸ்தான்

126-மியான்மா்

129-இலங்கை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com