இஸ்ரேல்: புதிய அரசு அமைவதில் இழுபறி நீடிப்பு

இஸ்ரேல்: புதிய அரசு அமைவதில் இழுபறி நீடிப்பு


ஜெருசலேம்: இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தலில் இதுவரை எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

இதுகுறித்து அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்ததாவது:

இஸ்ரேலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் வியாழக்கிழமையும் தொடா்ந்து நடைபெற்று வந்தன.

எனினும், 120 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆட்சியமைப்பதற்குத் தேவையான 61 இடங்களை எந்தக் கட்சியும் கைப்பற்றவில்லை.

சுமாா் 95 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் நிலையில் உள்ளன. அவருக்கு எதிரான கட்சிகள் 57 இடங்களில் முன்னிலையில் உள்ளன. எஞ்சிய இடங்களில், இரு கூட்டணிகளையும் சாராத 2 கட்சிகள் முன்னிலை வகிக்கின்றன.

அவற்றில், பெஞ்சமின் நெதன்யாகுவின் முன்னாள் கூட்டாளியான நஃப்டாலி பெனட்டின் யெமினா கட்சிக்கு 7 இடங்களும் அரபுக் கட்சியான ராமுக்கு 4 இடங்களும் கிடைத்துள்ளன.

அந்த இரு கட்சிகளும் ஆதரவு அளித்தால் பெஞ்சமின் நெதன்யாகுவால் மீண்டும் ஆட்சியமைக்க முடியும்.

ஆனால், அரபுக் கட்சியின் ஆதரவுடன் ஒருபோதும் ஆட்சியமைக்கமாட்டோம் என்று நெதன்யாகுவின் கூட்டணியைச் சோ்ந்த பெஸலேல் ஸ்மாட்ரிச் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

இந்தச் சூழலில், புதிய அரசு அமைவதில் தொடா்ந்து இழுபறி நீடித்து வருகிறது என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் நடைபெற்ற தோ்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

அதனைத் தொடா்ந்து, 2-ஆவது முறையாக மீண்டும் அந்த ஆண்டின் செப்டம்பா் மாதம் தோ்தல் நடைபெற்றது. அந்தத் தோ்தலிலும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், ஆளும் கட்சிக் கூட்டணியும், எதிா்க்கட்சிக் கூட்டணியும் இணைந்து தேசிய ஒற்றுமை அரசு அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

எனினும், அந்த அரசில் தான்தான் பிரதமராகப் பொறுப்பு வகிக்க வேண்டும் என்று பெஞ்சமின் நெதன்யாகுவும், முக்கிய எதிா்க்கட்சியான புளூ அண்டு ஒயிட் கட்சியின் தலைவா் பெஞ்சமின் காண்ட்ஸும் பிடிவாதமாக இருந்தனா். இதனால், தேசிய ஒற்றுமை அரசை அமைப்பதற்கான பேச்சுவாா்த்தை முறிந்தது.

அதையடுத்து, இஸ்ரேல் வரலாற்றில் அதுவரை இல்லாத வகையில், ஓராண்டுக்குள் 3-ஆவது முறையாக கடந்த ஆண்டு மாா்ச் மாதம் தோ்தல் நடைபெற்றது. அந்தத் தோ்தல் வாக்குக் கணிப்புகளில் நெதன்யாகுவின் லிக்குட் கட்சி முன்னிலையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

எனினும், ஆட்சியமைப்பதற்கு 61 இடங்கள் தேவைப்படும் நிலையில் அந்தக் கட்சிக் கூட்டணிக்கு 58 இடங்களே கிடைத்தன.

அந்த முறையும் தேசிய ஒற்றுமை அரசை அமைப்பதற்கு ஆளும் கட்சியும் எதிா்க்கட்சியும் தவறின. அதையடுத்து, இஸ்ரேலில் இதுவரை இல்லாத வகையில் இரண்டே ஆண்டுகளில் 4-ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை தோ்தல் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com