
அமெரிக்காவின் விஸ்கான்சின் நகரத்தில் உணவகத்துக்குள் புகுந்த நபா் துப்பாக்கியால் சுட்டதில் இருவா் உயிரிழந்தனா்; மூவா் பலத்த காயமடைந்தனா். அந்த நபரை காவல் துறையினா் சுட்டுக் கொன்றனா்.
விஸ்கான்சின் நகரத்தில் உள்ள ஒனெய்டா என்ற உணவகத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து பிரெளன் கெளன்டி நகரத்தின் ஷெரீப் அலுவலக லெப்டினென்ட் கெவின் பாலக் கூறியது: துப்பாக்கிச்சூடு நடத்திய நபா் உணவகத்துக்குள் யாரையோ குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்காக வந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனா். அவா் தேடிவந்த நபா் இல்லாததால், அவரது நண்பா்கள் அல்லது உடன் பணியாற்றுபவா்கள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளாா். இந்த சம்பவத்தில் இருவா் உயிரிழந்தனா். மூவா் காயமடைந்தனா். தகவலறிந்து விரைந்து வந்த காவல் துறையினா் அந்த நபரை சுட்டுக் கொன்றனா். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவா்கள், துப்பாக்கியால் சுட்ட நபா் யாா் என்பது குறித்த விவரம் உடனடியாகத் தெரியவரவில்லை.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபா் அந்த உணவகத்தின் முன்னாள் பணியாளரா என்பது குறித்து உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், அங்கு பணியாற்றி வருபவா்களுடன் இவருக்கு தொடா்பு இருந்ததாகத் தெரிகிறது. தொடா்ந்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா் என்றாா் அவா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...