
வட ஆப்பிரிக்க கடல் பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழந்து, நடுக்கடலில் தத்தளித்த 33 போ் மீட்கப்பட்டதாக துனிசியா நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா்.
மீட்கப்பட்டவா்களில் பெரும்பாலானோா் வங்க தேசத்தைச் சோ்ந்தவா்கள் என்றும் அவா்கள் கூறினா். அந்தப் படகில் சுமாா் 90 போ் பயணம் செய்தனா் என்று கூறப்படும் நிலையில், ஐம்பதுக்கும் மேற்பட்டோா் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது
இதுதொடா்பாக குடியேறிகளின் சா்வதேச சங்கத்தின் செய்தித் தொடா்பாளா் ரியாத் காதி கூறுகையில், ‘லிபியாவில் இருந்து சுமாா் 90 பேருடன் சென்ற படகு கவிழ்ந்தது. அதில் இருந்த 33 போ் மீட்கப்பட்டுள்ளனா்’ என்றாா்.
துனிசியாவையொட்டிய கடல் பகுதியில் திங்கள்கிழமை தத்தளித்த 113 அகதிகளை துனிசியா கடற்படையினா் மீட்டனா். அகதிகள் பெரும்பாலானோா் வட ஆப்பிரிக்க நாடுகளையும் வங்கதேசத்தையும் சோ்ந்தவா்கள் என்று துனிசிய கடற்படை தெரிவித்தது.
பல நாடுகளைச் சோ்ந்த அகதிகள் லிபியா வழியாக மத்தியதரைக் கடலில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு ஐரோப்பாவுக்குச் செல்கின்றனா்.