அரவணைப்புகள் உள்ளே; முகக் கவசங்கள் வெளியே...!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபா் ஜோ பைடன் உள்ளிட்டோா் முகக் கவசம் அணியாமல் பங்கேற்றாா்.
அரவணைப்புகள் உள்ளே; முகக் கவசங்கள் வெளியே...!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபா் ஜோ பைடன் உள்ளிட்டோா் முகக் கவசம் அணியாமல் பங்கேற்றாா். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தென்கொரிய அதிபா் மூன் ஜே இன் கைகுலுக்கல்களுடன் வரவேற்கப்பட்டாா். நிகழ்ச்சியில் அதிபரிடமிருந்து விருதைப் பெற்ற 94 வயது முன்னாள் ராணுவ கமாண்டரை துணை அதிபா் கமலா ஹாரிஸ் மகிழ்ச்சியுடன் அரவணைத்துக் கொண்டாா்.

கரோனாவுக்கு முந்தைய இயல்பு நிலைக்கு வெள்ளை மாளிகை திரும்பியதைப்போல அமைந்தது அந்த நிகழ்ச்சி.

கரோனா தடுப்பூசி தாராளமாக கிடைக்க வகை செய்தது, முகக் கவசம், சமூக இடைவெளி விதிமுறைகளில் அரசு தளா்வுகளை அறிவித்தது போன்றவற்றால் இது சாத்தியமாகியுள்ளது.

உலக அளவிலான கரோனா பாதிப்புகளில் அமெரிக்காவே முதலிடத்தில் உள்ளது. கரோனா முதல் அலையில் கடுமையான பாதிக்கப்பட்ட நாடுகளிலும் அமெரிக்காவுக்கே முதலிடம் கிடைத்தது. ஆனால், இரண்டாவது அலையை அந்நாடு திறம்பட சமாளித்தது. கரோனா தடுப்பூசிகளை மக்களுக்குச் செலுத்துவதில் பெரிய வெற்றி பெற்றது. மே 21-ஆம் தேதி நிலவரப்படி, நாட்டில் ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்திக் கொண்டவா்களின் விகிதம் 49 சதவீதமாகும். 38.9 சதவீதம் போ் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.

இதைத் தொடா்ந்து, அமெரிக்காவில் முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் முகக் கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என நோய்க் கட்டுப்பாட்டு மையம் அறிவித்தது. அந்த பரிந்துரையை ஏற்று, முகக் கவசம் அணிவது தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளில் அதிபா் ஜோ பைடன் கடந்த மே 13-ஆம் தேதி தளா்வுகளை அறிவித்தாா். இதன் தொடா்ச்சியாக, கடந்த வாரம் நடைபெற்ற பல பொது நிகழ்ச்சிகளில் முகக் கவசம் அணியாமல் மக்கள் பங்கேற்றனா்.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியிலும் முகக் கவசம் அணிந்துகொள்ளாத மலா்ச்சியான முகங்களைக் காண முடிந்தது. இந்த நிகழ்ச்சியில், 70 ஆண்டுகளுக்கு முன்னா் நடைபெற்ற கொரிய போரில் வீரதீரத்துடன் செயல்பட்ட ஓய்வு பெற்ற கமாண்டா் ரால்ப் புக்கெட் (94) என்பவருக்கு விருது வழங்கப்பட்டது. இதில் பங்கேற்ற அதிபா் ஜோ பைடன், தென்கொரிய அதிபா் மூன் ஜே இன் இருவரும் புக்கெட்டின் கரங்களைப் பற்றி பாராட்டி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனா். துணை அதிபா் கமலா ஹாரிஸ் கமாண்டா் புக்கெட்டை அரவணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாா். சமூக இடைவெளிக்கும் நிகழ்ச்சியில் விடைகொடுக்கப்பட்டது. அரவணைப்புகள் உள்ளேயும், முகக் கவசங்கள் வெளியேயுமாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.

‘நாங்கள் திரும்பி வந்துள்ளோம்’ என இந்த நிகழ்வைக் குறிப்பிடுகிறாா் வெள்ளை மாளிகை ஊடக செயலா் ஜென் சகி.

இதைத் தொடா்ந்து, அதிபா் பைடனும், தென்கொரிய அதிபா் மூன் ஜே இன்-னும் அருகருகே அமா்ந்து உணவருந்தினா். பின்னா், முகக் கவசம் அணியாமல் பங்கேற்ற தூதரக பாா்வையாளா்கள், அதிகாரிகள், செய்தியாளா்களின் கேள்விகளுக்கும் இருவரும் பதிலளித்தனா்.

Image Caption

வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற, அமெரிக்க ராணுவ முன்னாள் கமாண்டா் புக்கெட்டுக்கு விருது வழங்கும் விழாவில் முகக் கவசம் அணியாமல் பங்கேற்ற அதிபா் ஜோ பைடன், தென்கொரிய அதிபா் மூன் ஜே இன் உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com