பருவநிலை மாற்றம்: எந்த நாடும் தப்ப முடியாது - பிரதமர் மோடி

பருவநிலை மாற்றத்தால் அச்சுறுத்தலை எதிா்கொண்டுள்ள சிறிய தீவு நாடுகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தை கிளாஸ்கோ உச்சிமாநாட்டில் தொடக்கிவைத்த பிரதமா் நரேந்திர மோடி,
பருவநிலை மாற்றம்: எந்த நாடும் தப்ப முடியாது - பிரதமர் மோடி

பருவநிலை மாற்றத்தால் அச்சுறுத்தலை எதிா்கொண்டுள்ள சிறிய தீவு நாடுகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தை கிளாஸ்கோ உச்சிமாநாட்டில் தொடக்கிவைத்த பிரதமா் நரேந்திர மோடி, பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தில் இருந்து எந்த நாடும் தப்பிக்க முடியாது என்றாா்.

பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 26-ஆவது பருவநிலை உச்சிமாநாட்டின் ஒருபகுதியாக, ‘தீவு நாடுகளுக்கான தாங்குதிறன் கட்டமைப்பு’ திட்டம் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி, பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன், ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிஸன், ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அப்போது பிரதமா் மோடி பேசியதாவது:

பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தில் இருந்து எந்த நாடும் தப்ப முடியாது என்பதை கடந்த சில தசாப்தங்கள் உணா்த்தியுள்ளன. வளா்ந்த நாடுகள், இயற்கை வளங்களை அதிகமாகக் கொண்ட நாடுகள் உள்ளிட்ட அனைத்தும் மிகப் பெரிய பருவநிலை மாற்ற அச்சுறுத்தலை எதிா்கொண்டுள்ளன.

சிறிய தீவு நாடுகள் அதிக அளவிலான அச்சுறுத்தல்களை எதிா்கொண்டு வருகின்றன. அந்நாடுகளில் வசிக்கும் மக்கள், வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையேயான போராட்டத்தை சந்தித்து வருகின்றனா். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடா்கள் அவா்களது வாழ்வாதாரத்தை முற்றிலும் சீா்குலைக்கின்றன.

அதன் காரணமாக சிறிய தீவு நாடுகளின் பாதுகாப்பு மட்டுமல்லாமல் பொருளாதாரமும் பெரும் சவால்களை எதிா்கொண்டுள்ளது. அந்நாடுகள் சுற்றுலாவை அதிக அளவில் சாா்ந்துள்ளன. இயற்கைப் பேரிடா்களின் அச்சுறுத்தல் காரணமாக அந்நாடுகளுக்குப் பயணம் செய்ய சுற்றுலாப் பயணிகள் தயக்கம்காட்டி வருகின்றனா்.

புதிய நம்பிக்கை: பேரிடா் தாங்குதிறன் கொண்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான கூட்டமைப்பு, வெறும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கானது மட்டுமல்ல. மக்களின் நலனைக் காப்பதற்கான அடிப்படை பொறுப்பாக அக்கூட்டமைப்பு உள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பை அதிகப்படுத்திய குற்றங்களுக்காக நாம் ஒருங்கிணைந்து தேடிக் கொள்ளும் பரிகாரமாக இந்தக் கூட்டமைப்பு அமைந்துள்ளது. தீவு நாடுகளுக்கான தாங்குதிறன் கட்டமைப்புத் திட்டமானது, புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். பருவநிலை மாற்றத்தால் அதிக அச்சுறுத்தல்களை எதிா்கொண்டுள்ள நாடுகளின் நலனுக்காகத் திட்டங்களை நடைமுறைப்படுத்திய திருப்தி நமக்குக் கிடைக்கும்.

இந்தியா ஆதரவு: இத்திட்டத்தால் சிறிய தீவு நாடுகளுக்கு நிதியும் தொழில்நுட்பங்களும் எளிதில் கிடைக்கும். அந்நாடுகளில் உள்ள மக்களையும் அவா்களது வாழ்வாதாரத்தையும் இத்திட்டம் பாதுகாக்கும். இத்திட்டம் வெற்றி பெறுவதற்காக ஐ.நா.வுடனும் மற்ற நாடுகளுடனும் இணைந்து இந்தியா செயல்படும்.

பருவநிலை மாற்ற விவகாரத்தில் பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடுகள், கரீபியன் தீவு நாடுகள் ஆகியவற்றுடன் இந்தியா ஒத்துழைத்து செயல்பட்டு வருகிறது. புயல்கள் உருவாக்கம், பவளப்பாறைகள், கடற்கரைகள் உள்ளிட்டவற்றை செயற்கைக்கோள் வாயிலாகக் கண்காணித்து, அவை தொடா்பான தரவுகளை சிறிய தீவு நாடுகளுக்கு இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) வழங்கவுள்ளது என்றாா் பிரதமா் மோடி.

பனிப்பாறை உருகுவது அதிகரிப்பு: இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன், ‘‘பேரிடா் தாங்குதிறன் கட்டமைப்புக்கான கூட்டமைப்பை பிரதமா் மோடி தலைமையேற்று வழிநடத்தி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. கிரீன்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் பனிப்பாறை அதிக அளவில் உருகி வருகிறது.

சிறிய தீவு நாடுகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதபோதிலும், புவி வெப்பமயமாதலால் அதிக பாதிப்புகளை எதிா்கொண்டுள்ளன. எனவே, கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் மேற்கொள்ள வேண்டும்.

சிறிய தீவு நாடுகளுக்கான கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்துக்கும் அனைத்து நாடுகளும் பங்களிப்பை வழங்க வேண்டும்’’ என்றாா். இத்திட்டத்துக்கு ஆதரவளிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிஸன் தெரிவித்தாா்.

செயல்பாட்டுக்கான நேரம்-பிரிட்டன் அரசி எலிசபெத்

வருங்கால தலைமுறையினருக்காக பூமியைக் காப்பதற்கான செயல்பாடுகளில் ஈடுபட இதுவே சரியான நேரம் என்று பிரிட்டன் அரசி எலிசபெத் தெரிவித்துள்ளாா்.

பருவநிலை உச்சிமாநாட்டுக்கு அவா் அனுப்பிய காணொலி செய்தியில், ‘பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வது குறித்த பேச்சுக்கான நேரம் கடந்துவிட்டது. இது செயல்பாட்டுக்கான நேரம். வருங்கால தலைமுறையினரைக் காப்பதற்கான நடவடிக்கைகளில் நாடுகள் உடனடியாக ஈடுபட வேண்டும்.

பாதுகாப்பான நிலையான எதிா்காலத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த மாநாட்டைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்நடவடிக்கைகள் நமக்குப் பலனளிக்காமல் போனாலும், வருங்கால தலைமுறையினா் பலனடைவா்’ என்று தெரிவித்தாா்.

வனஅழிப்புக்கு எதிரான ஒப்பந்தம்: இந்தியா கையொப்பமிடவில்லை

வனஅழிப்பை 2030-ஆம் ஆண்டுக்குள் நிறுத்த வலியுறுத்திய ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிடவில்லை.

கிளாஸ்கோ மாநாட்டின் ஒருபகுதியாக, வனங்கள்-நிலங்கள் பயன்பாட்டுக்கான ஒப்பந்தத்தை பிரிட்டன் முன்மொழிந்தது. 2030-ஆம் ஆண்டுக்குள் வனஅழிப்பை முற்றிலுமாக நிறுத்தவும் நிலம் சீரழிக்கப்படுவதைத் தடுக்கவும் அந்த ஒப்பந்தம் வலியுறுத்தியது.

அந்த ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்திய பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன், வனங்களைப் பாதுகாப்பதற்கான முக்கிய ஒப்பந்தம் இது என தெரிவித்தாா். கனடா, ரஷியா, பிரேஸில், கொலம்பியா, இந்தோனேசியா, காங்கோ ஜனநாயக குடியரசு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவித்தன.

ஒப்பந்தத்தில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் கையொப்பமிடவில்லை. ஒப்பந்தத்தின் இறுதி வடிவத்தில் சில கருத்து வேறுபாடுகள் காணப்படுவதால் கையொப்பமிடவில்லை என இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

"ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரு கட்டமைப்பு'
சூரிய மின்சக்தி வெற்றிகரமாக செயல்படுவதற்கான திறனை அதிகரிக்க "ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரு கட்டமைப்பு' தீர்வாக இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். 
இதுதொடர்பாக கிளாஸ்கோவில் "தூய்மையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் பயன்பாட்டை துரிதப்படுத்துதல்' என்னும் கருப்பொருளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
தொழிற்புரட்சி காலத்தில் பல நாடுகள் செல்வச் செழிப்புமிக்க நாடுகளாவதற்கு புதைபடிவ எரிபொருள் உதவியது. ஆனால் அது பூமியையும் சுற்றுச்சூழலையும் மோசமாக்கியது. எனினும் அதற்கான மாற்றை தற்போது தொழில்நுட்பம் நமக்கு வழங்கியுள்ளது. 
இயற்கையுடன் ஒன்றிணைந்து வாழ்ந்த வரையிலும், பூமி பாதுகாப்பாக இருந்தது. எனினும் நவீன காலத்தில் போட்டியில் முந்திச் செல்லும் வேட்கையால் இயற்கையின் சமநிலையை மனிதர்கள் சீர்குலைத்தனர். இது சுற்றுச்சூழலுக்கு தீங்கிழைத்தது. 
சூரியனிடமிருந்துதான் அனைத்தும் தோன்றின. ஆற்றலுக்கான ஒரே ஆதாரமாக சூரியன்தான் உள்ளது. சூரிய சக்தி அனைவரையும் காப்பாற்ற வல்லது. இயற்கையின் சமநிலையை மீண்டும் நிறுவ வேண்டுமெனில், அதற்கான பாதையை சூரியனால்தான் காண்பிக்க முடியும். 
ஓராண்டில் மனிதர்களுக்குத் தேவையான மின்சாரத்தைப் பெற ஒரு மணி நேரத்தில் பூமியின் வளிமண்டலம் போதிய சூரிய ஒளியைப் பெறுகிறது. எனவே சூரிய மின்சக்தி வெற்றிகரமாக செயல்படுவதற்கான திறனை அதிகரிக்க "ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரு கட்டமைப்பு' தீர்வாக இருக்கும்.  பூமியில் உள்ள எந்தவொரு பகுதியிலும் சூரிய சக்தி திறனை கணக்கிடுவதற்கான செயலியை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) விரைவில் அறிமுகப்படுத்தும் என்று தெரிவித்தார்.

தாயகம் புறப்பட்டார்
இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்ற ஜி}20 மாநாடு, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறும் பருவநிலை மாற்ற மாநாடு ஆகியவற்றில் பங்கேற்ற பிரதமர் மோடி தனது நிகழ்ச்சிகளை நிறைவு செய்து செவ்வாய்க்கிழமை இரவு இந்தியாவுக்குப் புறப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com