மரண படுக்கையில் சீன பத்திரிகையாளர்; கரோனா குறித்து செய்தி சேகரித்ததால் சிறை தண்டனை

வூஹான் நகரில் கரோனா பரவலுக்கு எதிராக சீனா எடுத்த நடவடிக்கை குறித்து செய்தி சேகரித்த பத்திரிகையாளர் கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம், கைது செய்யப்பட்டார்.
சீன பத்திரிகையாளர்
சீன பத்திரிகையாளர்

வூஹான் நகரில் கரோனா பரவலுக்கு எதிராக சீனா எடுத்த நடவடிக்கை குறித்து செய்தி சேகரித்த பத்திரிகையாளரின் உடல்நிலை அபாயக் கட்டத்தில் உள்ளதாக அவரின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

முன்னாள் வழக்கறிஞரான சாங் சான் (38), கடந்த 2020ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், கரோனா குறித்து செய்தி சேகரிக்க பெருந்தொற்றின் மையப்பகுதியாக விளங்கிய வூஹான் நகருக்கு பயணம் மேற்கொண்டார். பெருந்தொற்று பரவலை சீன அரசு கையாண்ட விதம் குறித்து கேள்வி எழுப்பி விடியோ பதிவு செய்தார்.

இதையடுத்து, அந்தாண்டு மே மாதம், அவர் கைது செய்யப்பட்டு, பிரச்னையை தூண்டுவகதாகக் கூறி நான்காண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. சீனாவில், அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் வழக்கமாக இந்த பிரிவின் கீழ்தான் கைது செய்யப்படுவர்.

சாங் சானின் உடல்நிலை குறித்து அவரின் சகோதரர் சாங் ஜூ ட்விட்டர் பக்கத்தில், "நீண்ட நாள்களுக்கு அவர் வாழ மாட்டார். அவரை அவரே பார்த்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளேன். அவரின் மனதில், கடவுளும் நம்பிக்கையும் மட்டுமே உள்ளது. மற்ற எதை பற்றியும் அவர் கவலைப்படவில்லை" என பதிவிட்டுள்ளார். 

அவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருதவாகவும் அவரை வற்புறுத்தி மூக்கு வழியாக உணவு அளிக்கப்பட்டு வருவதாக அவரின் வழக்கறிஞர் குழுவினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவரின் தற்போதைய உடல்நிலை குறித்து விவரம் தெரியவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

சாங் ஜூ ட்விட்டர் பதிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவரின் சகோதரியை சீன அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அம்னெஸ்டி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அம்னெஸ்டி பரப்புரையாளர் க்வென் லீ கூறுகையில், "உண்ணாவிரதத்தை அவர் உடனடியாக கைவிட வேண்டும் எனில், அவர் விடுதலை செய்யப்பட வேண்டும். அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். சாங்கின் கைது மனித உரிமைக்கு எதிரான வெட்கக்கேடான தாக்குதல்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com