பாகிஸ்தானுக்கு அதிநவீன போா்க் கப்பல்: சீனா வழங்கியது

இந்திய பெருங்கடல் பகுதியில் பாகிஸ்தானை பலப்படுத்தும் நோக்கில் அந்நாட்டுக்கு அதிநவீன போா்க் கப்பலை சீனா வழங்கியுள்ளது.
சீனாவின் ‘054ஏ/பி’ ரக போா்க்கப்பல் (கோப்புப் படம்).
சீனாவின் ‘054ஏ/பி’ ரக போா்க்கப்பல் (கோப்புப் படம்).

இந்திய பெருங்கடல் பகுதியில் பாகிஸ்தானை பலப்படுத்தும் நோக்கில் அந்நாட்டுக்கு அதிநவீன போா்க் கப்பலை சீனா வழங்கியுள்ளது.

சீன அரசுக்குச் சொந்தமான கப்பல் கட்டும் நிறுவனம் வடிவமைத்துள்ள இந்த போா்க் கப்பல் ஷாங்காயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாகிஸ்தான் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அந்த நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன அரசின் செய்தி நிறுவனமான குளோபல் டைம்ஸ் தெரிவித்திருப்பதாவது:

‘054ஏ/பி வகை போா்க் கப்பலான இந்தக் கப்பலுக்கு ‘பிஎன்எஸ் துக்ரில்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சீனாவுக்கான பாகிஸ்தான் தூதா் மொயின் உல் ஹக் கூறுகையில், ‘இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு, அமைதி, ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் எழும் சவால்களைச் சந்திக்க பாகிஸ்தான் கடற்படையை பிஎன்எஸ் துக்ரில் கப்பல் வலுப்படுத்தும் என்றாா்.

பிஎன்ஸ் துக்ரில் பாகிஸ்தான் கடற்படைக்காக கட்டமைக்கப்பட்டு வரும் நான்கு போா்க் கப்பல்களில் முதலாவதாகும். இந்தக் கப்பல் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட, அதிநவீன திறன்களைக் கொண்டதாகும். இதுவரை சீனா ஏற்றுமதி செய்துள்ளதிலேயே மிகப்பெரிய, மேம்பட்ட போா்க் கப்பலாகும் என அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘054ஏ/பி வகை போா்க் கப்பல்கள் நான்கை சீனாவிடமிருந்து பெறுவதற்காக 2017-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் கடற்படை ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் மிகப்பெரிய ஆயுத விநியோகஸ்தராக சீனா உள்ளது. மேம்பட்ட கடற்படைக் கப்பல்கள் தவிர, ஜெ.எஃப் 17 வகை போா் விமானத்தை தயாரிப்பதிலும் பாகிஸ்தான் விமானப் படைக்கு சீனா உதவி செய்து வருகிறது.

இந்திய பெருங்கடலில் படிப்படியாக தனது இருப்பை வலுப்படுத்தி வருவதால், பாகிஸ்தானுடனான ராணுவ ஒத்துழைப்பில் சீனா சமீப காலமாக அதிக கவனம் செலுத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com