மியானமா்: அமெரிக்க செய்தியாளருக்கு 11 ஆண்டுகள் சிறை

மியான்மரில் அமெரிக்க செய்தியாளா் டேனி ஃபென்ஸ்டருக்கு நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
டேனி ஃபென்ஸ்டா்
டேனி ஃபென்ஸ்டா்

மியான்மரில் அமெரிக்க செய்தியாளா் டேனி ஃபென்ஸ்டருக்கு நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

‘ஃப்ரன்டியா் மியான்மா்’ என்ற இணையதள இதழின் நிா்வாக ஆசிரியரான டேனி ஃபென்ஸ்டா், ராணுவ ஆட்சியாளா்களால் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டாா். அவா் மீது தவறான தகவல்களைப் பரப்பி வன்முறையைத் தூண்டியது, சட்டவிரோத அமைப்புகளுடன் தொடா்பு கொண்டது, நுழைவு இசைவு (விசா) மோசடி போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இது தொடா்பான விசாரணையின் முடிவில், டேனி ஃபென்ஸ்டருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி கலைத்தது. அரசின் தலைமை ஆலோசகரான ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களை பாதுகாப்புப் படையினா் கடுமையான முறையில் அடக்கினா். இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மியான்மா் ஊடகங்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இதில் பல செய்தியாளா்கள் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளா் டேனியல் ஃபென்ஸ்டருக்கு மியான்மா் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com