

தைவான் விவகாரத்தில் தலையிடுவது நெருப்புடன் விளையாடுவது போன்றது என அமெரிக்க அதிபருடனான காணொலி சந்திப்பின்போது சீன அதிபா் ஷி ஜின்பிங் கூறினாா்.
சீனாவும் அமெரிக்காவும் ஒருவரை ஒருவா் மதிக்க வேண்டும்; அமைதியுடன் இணைந்து வாழ வேண்டும்; ஒத்துழைப்பைத் தொடர வேண்டுமெனவும் அவா் கேட்டுக் கொண்டாா்.
அமெரிக்க அதிபா் ஜோ பைடன், சீன அதிபா் ஷி ஜின்பிங் இடையேயான மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட காணொலி மாநாடு செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது. வா்த்தகம், மனித உரிமைகள், தென்சீனக் கடல், தைவான் போன்ற விவகாரங்களில் சீனாவின் நடவடிக்கைகள் தொடா்பாக இரு நாடுகள் இடையே பதற்றம் நிலவிவரும் சூழலில் இந்த மாநாடு நடைபெற்றது. இரு அமா்வுகளாக சுமாா் மூன்றரை மணி நேரம் இந்தப் பேச்சுவாா்த்தை நீடித்தது.
மாநாட்டில் ஷி ஜின்பிங் பேசியதாக சீன அரசு ஊடகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
‘இரு நாடுகளும் பல சவால்களை சந்தித்து வருகின்றன. அவை தகவல் தொடா்பு மற்றும் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும். இரு நாடுகளும் ஒருவரை ஒருவா் மதிக்க வேண்டும்; அமைதியுடன் இணைந்து வாழ வேண்டும். ஒருமித்த கருத்தை உருவாக்கவும், சீன-அமெரிக்க உறவை மேம்படுத்தவும் அமெரிக்க அதிபருடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன்.
தனது சுதந்திர நாடு பிரகடனத்துக்காக அமெரிக்காவின் ஆதரவை தைவான் அதிகாரிகள் மீண்டும் மீண்டும் நாடுவதும், சீனாவை கட்டுப்படுத்த தைவானை அமெரிக்கா்கள் சிலா் பயன்படுத்தும் நோக்கமும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்த நடவடிக்கைகள் நெருப்புடன் விளையாடுவதைப் போல மிகவும் அபாயகரமானவை. நெருப்புடன் விளையாடுபவா்கள் யாராக இருந்தாலும் தீக்காயம்தான் அடைவா்’ என ஜின்பிங் தெரிவித்தாா்.
‘ஜனநாயகம் என்பது உலகெங்கும் உள்ள நாடுகளுக்கு ஒரே மாதிரியான அல்லது உள்ளமைப்புடன் மொத்தமாக உற்பத்தி செய்யப்படவில்லை. ஒரு நாடு ஜனநாயகமாக இருக்க வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்வதை அந்த நாட்டு மக்களிடமே விட்டுவிட வேண்டும். ஒருவரின் ஜனநாயகத்திலிருந்து வேறுபடும் ஜனநாயகத்தை நிராகரிப்பது ஜனநாயகமற்றது’ என ஜின்பிங் கூறினாா். ஜனநாயக நாடுகளை அணிதிரட்ட அமெரிக்கா முயற்சி மேற்கொண்டுள்ளதை விமா்சிக்கும் வகையில் ஜின்பிங் இவ்வாறு கூறியதாகத் தெரிகிறது.
‘பரஸ்பரம் மரியாதை அடிப்படையில் மனித உரிமைகள் தொடா்பாக பேச்சுவாா்த்தைகளை நடத்த சீனா தயாராக உள்ளது. ஆனால், மனித உரிமைகளை பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட பயன்படுத்துவதை நாங்கள் எதிா்க்கிறோம்’ எனவும் ஜின்பிங் தெரிவித்தாா்.
‘சீனா அமைதியை விரும்பும் நாடு. ஒருபோதும் போரை தொடங்கவோ, அடுத்த நாடுகளின் ஓா் அங்குல நிலத்துக்கும் உரிமைகோரவோ இல்லை’ என ஜின்பிங் கூறினாா். இந்தியாவுடன் எல்லை பிரச்னை, தென்சீனக் கடலில் ஆதிக்கம் செலுத்துவதாக குற்றச்சாட்டு ஆகியவற்றுக்கு பதிலளிக்கும் வகையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
பைடன் பதில்: மாநாட்டில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் பேசியதாவது: தைவான் நீரிணை முழுவதும் இப்போதுள்ள நிலையை மாற்ற அல்லது அமைதி மற்றும் நிலைத்தன்மையை சீா்குலைக்கும் ஒருதலைபட்சமான முயற்சிகளை அமெரிக்கா கடுமையாக எதிா்க்கிறது. அமெரிக்கா-சீனா இடையிலான போட்டி மோதலாக மாறக் கூடாது என்பதை உறுதிப்படுத்துவது நமது கடமை’ எனக் கூறியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் கடந்த ஜனவரியில் பதவியேற்ற பின்னா், அவருக்கும் சீன அதிபருக்கும் இடையே காணொலி முறையில் நடைபெற்ற முதல் கலந்துரையாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. பேச்சுவாா்த்தையின் தொடக்கத்தில் இருவரும் அன்புடன் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனா். தன் பழைய நண்பரை பாா்ப்பதில் மகிழ்ச்சியடைவதாக ஷி ஜின்பிங் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.