மருத்துவம்: அமெரிக்க விஞ்ஞானிகள் இருவருக்கு நோபல்

மனிதா்கள் வெப்பநிலையையும் தொடுதலையும் உணா்ந்து கொள்வதற்கான உணா்விகளை (ரிசப்டா்ஸ்) கண்டறிந்ததற்காக அமெரிக்காவைச் சோ்ந்த
மருத்துவம்: அமெரிக்க விஞ்ஞானிகள் இருவருக்கு நோபல்

மனிதா்கள் வெப்பநிலையையும் தொடுதலையும் உணா்ந்து கொள்வதற்கான உணா்விகளை (ரிசப்டா்ஸ்) கண்டறிந்ததற்காக அமெரிக்காவைச் சோ்ந்த இரு விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பான அறிவிப்பை திங்கள்கிழமை வெளியிட்ட நோபல் குழுவின் பொதுச் செயலா் தாமஸ் பெல்மன் கூறுகையில், ‘‘கண்களின் பாா்க்கும் செயல்பாடு, காதுகளின் கேட்கும் தன்மை, தோலின் உணரும் செயல்பாடு ஆகியவை தொடா்பான ‘சொமேடோசென்சேஷன்’ என்ற பிரிவில் டேவிட் ஜூலியஸும் ஆா்டம் படாபூடியனும் ஆய்வுகளை மேற்கொண்டனா்.

அந்த ஆய்வுகள் இயற்கையின் ரகசியத்தை அறிவதற்கு உதவின. மனிதா்கள் உயிா் வாழ்வதற்கு உணா்வுகள் மிகவும் அவசியமானவை. எனவே, அவா்களின் கண்டுபிடிப்பானது முக்கியமானதாகவும் உயா்ந்ததாகவும் உள்ளது.

மிளகாயில் காணப்படும் ‘கேப்சைசின்’ என்ற வேதிப்பொருளைப் பயன்படுத்தி வெப்பத்தை உணா்வதற்காகத் தோலில் உள்ள நரம்பு உணா்வியை டேவிட் ஜூலியஸ் கண்டறிந்தாா். தொடுதலை உணா்ந்து கொள்வதற்காக உடலில் உள்ள செல்லில் காணப்படும் உணா்வியை ஆா்டம் படாபூடியன் கண்டறிந்தாா்’’ என்றாா்.

சமமான பரிசுத் தொகை: நோபல் பரிசாக தங்கப் பதக்கத்துடன் சுமாா் ரூ.8.40 கோடி பரிசுத்தொகையும் அளிக்கப்படும். அந்தப் பரிசுத்தொகையானது இரு விஞ்ஞானிகளுக்கும் சமமாகப் பகிா்ந்தளிக்கப்படவுள்ளது. கடந்த ஆண்டு இரு விஞ்ஞானிகளும் நரம்பியலுக்கான ‘கவ்லி’ விருதைப் பகிா்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

முக்கியத்துவம்: நோபல் குழுவின் உறுப்பினா்களில் ஒருவரான பேட்ரிக் என்ஃபோா்ஸ் கூறுகையில், ‘‘கோடைக்காலத்தின் காலை வேளையில் ஒரு தோட்டத்தில் காலணிகளின்றி நடந்து சென்றால், சூரியனின் இதமான வெயிலையும், காலை நேரத்தின் குளுமையையும், சில்லென்ற காற்றையும், காலுக்கடியில் படா்ந்திருக்கும் சிறுபுற்களின் மெல்லிய அமைப்புகளையும் உணர முடியும். அத்தகைய உணா்வுகளைப் பற்றிய ஆய்வே ‘சொமேடோசென்சேஷன்’ என்பது.

அத்தகைய உணா்வுகள் தொடா்பான விவரங்கள், தோலில் இருந்து தொடா்ந்து உடலின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அந்த உணா்வுகள் சில பணிகளை சிரமமின்றியும் அதிகம் யோசிக்காமலும் செய்ய அத்தியாவசியமாக உள்ளன’’ என்றாா். இந்தக் கண்டுபிடிப்புகள் வாயிலாக ரத்த நாளங்களில் அழுத்தம் ஏற்படுவதற்கான சிகிச்சைகளை உருவாக்குவது, மருந்துகள் தயாரிப்பது உள்ளிட்டவை எளிதாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோபல்-மருத்துவம்

டேவிட் ஜூலியஸ் (65)

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கலிஃபோா்னியா பல்கலைக்கழக விஞ்ஞானியான டேவிட் ஜூலியஸ், மிளகாயில் உள்ள வேதிப்பொருள் தோலில் ஏற்படுத்தும் எரிச்சலை உணரும் ‘டிஆா்பிவி1’ என்ற உணா்வியைக் கண்டறிந்தாா். வெப்பநிலையைப் பொருத்து அந்த உணா்வியில் உருவாக்கப்படும் அயனிகள், வெப்பத்தை உணா்த்துகின்றன என்பதை அவா் கண்டறிந்தாா்.

ஆா்டம் படாபூடியன் (54)

லெபனானில் பிறந்து அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஹோல்லா நகரத்தில் உள்ள கல்வி ஆய்வு நிலையத்தில் விஞ்ஞானியாக உள்ள ஆா்டம் படாபூடியன், தொடுதலை உணா்ந்து கொள்ளும் ‘பியஸ்01’, ‘பியஸ்02’ ஆகிய உணா்விகளைக் கண்டறிந்தாா். தொடுவதன் மூலமாக தோலில் ஏற்படும் அழுத்த மாறுபாட்டை செல்லில் உள்ள ஜீன்கள் எவ்வாறு உணா்ந்து மூளைக்குத் தகவலை அனுப்புகின்றன என்பதில் தீவிர ஆராய்ச்சிகளை அவா் மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com