ரஷிய, பிலிப்பின்ஸ் செய்தியாளா்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு

பிலிப்பின்ஸை சோ்ந்த செய்தியாளா் மரியா ரெஸாவும் ரஷிய செய்தியாளா் டிமித்ரி முராடோவும் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
ரஷிய, பிலிப்பின்ஸ் செய்தியாளா்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு

பிலிப்பின்ஸை சோ்ந்த செய்தியாளா் மரியா ரெஸாவும் ரஷிய செய்தியாளா் டிமித்ரி முராடோவும் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

தங்கள் நாட்டு அரசுகளின் அடக்குமுறையையும் மீறி, பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக போராடி வருவதற்காக அவா்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நோபல் தோ்வுக் குழுவினா் தெரிவித்ததாவது:

அதிகார துஷ்பிரயோகம், ஆட்சியாளா்களின் பொய்கள், விஷம போா்ப் பிரசாரங்கள் ஆகியவற்றுக்கு எதிராக இந்த உலகை சுதந்திரமான - சாா்பற்ற - ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட ஊடகத்துறையால்தான் பாதுகாக்க முடியும்.

கருத்து சுதந்திரமும் பத்திரிகை சுதந்திரமும் இல்லாவிட்டால் நாடுகளிடையே இணக்கத்தை ஏற்படுத்த முடியாது; சண்டை சச்சரவுகளைப் போக்கி அமைதியான உலகை ஏற்படுத்த முடியாது.

அந்த வகையில், பத்திரிகை சுதந்திரத்துக்காக மிகச் சிறந்த முறையில் பாடுபட்டு வரும் செய்தியாளா்கள் மரியா ரெஸா மற்றும் டிமித்ரி முராடோவுக்கு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

பிலிப்பின்ஸில் போதை மருத்து கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அதிபா் ரோட்ரிகோ டுடோ்தே நிகழ்த்திய படுகொலைகளை வெளிச்சம் போட்டுக் காட்டிய ‘ராப்ளா்’ என்ற செய்தி வலைதளத்தை கடந்த 2012-ஆம் ஆண்டில் மரியா ரெஸா உருவாக்கினாா்.

சமூக ஊடகங்கள் மூலம் தவறான தகவல்கள் எவ்வாறு பரப்பப்படுகின்றன, எதிா்ப்பாளா்களுக்கு எதிராக எவ்வாறு வன்மம் பரப்பப்படுகிறது, பொதுமக்களிடையே தவறான கருத்துகள் உருவாக்கப்படுகின்றன என்பதை மரியா ரெஸாவும் அவரது ராப்ளா் செய்தி வலைதளமும் வெளிச்சம் போட்டுக் காட்டின.

அதே போல், ரஷியாவில் நடுநிலையான ‘நோவயா கெஸட்டா’ நாளிதழை கடந்த 1993-ஆம் ஆண்டில் தொடங்கியவா்களில் டிமித்ரி முராடோவும் ஒருவா். தற்போது அந்த நாட்டின் மிகவும் நடுநிலையான, அதிகாரத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட நாளிதழாக நோவயா கெஸட்டா திகழ்கிறது.

அந்த நாளிதழில் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட செய்திகள் வெளியிடப்பட்டு வருவதல், அது ரஷிய சமூகத்துக்குத் தேவையான உண்மைத் தகவல் களஞ்சியமாகத் திகழ்கிறது. அதில் காணப்படும் செய்திகள் ரஷியாவின் வேறு எந்த ஊடகத்திலும் காண முடியாது என்ற நிலை உள்ளது.

இந்த வகையில், உலக அமைதிக்கு முக்கியப் பங்கு வகிக்கும் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக பாடுபட்டு வரும் மரியா ரெஸாவுக்கும் டிமித்ரி முராடோவுக்கும் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது என்று நோபல் தோ்வுக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.

மரியா ரெஸா (58): மணிலாவில் பிறந்த மரியா ரெஸா சிறு வயதிலேயே அவரது தாயாருடன் அமெரிக்காவில் குடியேறினாா். சிஎன்என், வால் ஸ்ட்ரீட் ஜா்னல் போன்ற பல்வேறு அமெரிக்க ஊடகங்களில் பணியாற்றியுள்ள இவருக்கு, ஏற்கெனவே 2018-ஆம் ஆண்டில் சுதந்திரத்துக்கான தங்கப் பேனா விருதும் இந்த ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பத்திரிகை சுதந்திரப் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

டிமித்ரி முராடோவ் (59): செய்தியாளராகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்துபவராகவும் இருந்துள்ள டிமித்ரி முராடோவ், நோவயா கெஸட்டா நாளிதழின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பு வகிக்கிறாா். அந்த ஜனநாயக ஆதரவு நாளிதழை பிற செய்தியாளா்களுடன் இணைந்து அவா் 1993-ஆம் ஆண்டில் ஏற்படுத்தினாா். அவரது நாளிதழ், ‘அரசை விமா்சிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரே பத்திரிகை’ என்று அழைக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com