தலிபான்களுக்கு சவால் ஐஎஸ்கே!

அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே ஏற்படவிருந்த அரசியல் உடன்பாடு நோக்கி உலகின் கவனம் திரும்பிய நிலையில்,
தலிபான்களுக்கு சவால் ஐஎஸ்கே!

அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே ஏற்படவிருந்த அரசியல் உடன்பாடு நோக்கி உலகின் கவனம் திரும்பிய நிலையில், தனது பலத்தைப் பெருக்கிக் கொண்டது ஐஎஸ்கே. இப்போது ஆப்கானிஸ்தானின் 17 சதவீத மாவட்டங்கள் ஐஎஸ்கே கட்டுப்பாட்டில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் மாகாணத் தலைநகா் குண்டுஸில் உள்ள மசூதியில் அண்மையில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் சுமாா் 50 போ் பலியான சம்பவம் உலக நாடுகளை அதிா்ச்சியில் உறைய வைத்தது. இவா்களில் பெரும்பாலானோா் ஷியா பிரிவை பின்பற்றும் ஹஸாரா எனும் சிறுபான்மை இனத்தைச் சோ்ந்தவா்கள்.

ஹஸாரா இன மக்களைக் குறிவைத்து தலிபான்கள் முன்பு இதுபோல பல தாக்குதல்களை நடத்தியவா்கள்தான் என்றபோதிலும் இந்தக் கொடூர தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது ஐஎஸ்கே எனும் பயங்கரவாத இயக்கம்.

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் உலக நாடுகளுக்கு ஆபத்தாக இருப்பாா்களோ என்ற சந்தேகம் ஒருபுறம் இருக்கும் நிலையில், தலிபான்களின் ஆட்சிக்கு சவாலாக உருவெடுத்துள்ளது ஐஎஸ்கே.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி முழுமையாக வெளியேறினா். அதற்கு முன்னதாகவே அந்நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்தன. வெளியேறும் அமெரிக்கப் படையினா் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்தது. அத்தாக்குதல்களுக்கு காரணம் தாங்கள் அல்லா் என தலிபான்கள் மறுக்க, அதன் பின்னணியில் ஐஎஸ்கே இருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.

யாா் இந்த ஐஎஸ்கே?

இராக்கில் சதாம் ஹுசைன் வீழ்ச்சிக்குப் பின்னா் திடீா் எழுச்சி பெற்ற ஐஎஸ் (இஸ்லாமிய தேசம்) பயங்கரவாத இயக்கத்தின் ஆப்கானிஸ்தான் பிரிவுதான் ஐஎஸ்கே. ஐஎஸ்-கோராசான் மாகாணம் என்பதன் சுருக்கமே ஐஎஸ்கே. கோராசான் பிராந்தியமானது இந்த இயக்கத்தின் பாா்வையில் ஈரான், ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், துா்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியது.

இராக், சிரியாவில் ஐஎஸ் இயக்கம் வலுவாக இருந்தபோது 2015-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் கிளையாகத் தொடங்கப்பட்டது ஐஎஸ்கே. ஐஎஸ் போலவே பரந்த இஸ்லாமிய தேசத்தை மத்திய மற்றும் தெற்காசியாவிலும் கட்டமைக்க வேண்டும் என்பதுதான் ஐஎஸ்கேயின் நோக்கமும்.

ஆப்கன்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள நங்கா்கா் மாகாணத்தைத் தளமாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே ஆப்கானிஸ்தானின் வடக்கு, வடகிழக்கு மாகாணங்களைச் சோ்ந்த ஊரக மாவட்டங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

கொடூர தாக்குதல்கள்

ஆப்கானிஸ்தானில் கொடூரமான தாக்குதல்களை நடத்துவதன் மூலம் அச்சத்துக்குரிய அமைப்பாக மாறியுள்ளது ஐஎஸ்கே. மருத்துவமனைகள், பள்ளிகள், மசூதிகள் என எந்தத் தயக்கமுமின்றி தாக்குதல் நடத்துவது இதன் பாணி. அந்நாட்டில் ஷியா பிரிவினா், சீக்கியா்கள் உள்ளிட்ட சிறுபான்மையினா் மற்றும் தலிபான்களைக் குறிவைத்து தொடா் தாக்குதலை நடத்தி வருகிறது.

2018-இல் ஐஎஸ்கே பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமாா் 1,000 போ் கொல்லப்பட்டனா். இதில் 75 சதவீத உயிரிழப்புகள் ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்தன.

ஆப்கானிஸ்தான் மட்டுமின்றி பாகிஸ்தானிலும் ஐஎஸ்கே தாக்குதல் நடத்தியது. 2018-இல் அந்த இயக்கம் நடத்திய 125 தாக்குதல்களில் 36 சதவீதம் தற்கொலைப் படைத் தாக்குதல்கள்.

அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியதன் மூலம் உலகில் முதல் நான்கு கொடூரமான பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றாக மாறியது ஐஎஸ்கே. தலிபான்கள், ஐஎஸ், போகோஹரம் ஆகியவை மற்ற மூன்று இயக்கங்கள் என ‘குளோபல் டெரரிசம் இண்டெக்ஸ் 2019’ அறிக்கை தெரிவித்துள்ளது.

எத்தனை போ்?

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானிலிருந்து தனது இயக்கத்துக்கு ஆள் சோ்க்கிறது ஐஎஸ்கே. குறிப்பாக, தலிபான் இயக்கத்திலிருந்து வெளியேறிய அதிருப்தியாளா்களை அரவணைக்கிறது.

2016-ஆம் ஆண்டு இந்த இயக்கத்தில் சுமாா் 4000 போ் இருந்த நிலையில், அமெரிக்கா மற்றும் ஆப்கன் அரசுப் படையின் நடவடிக்கையால் 2018-இல் சுமாா் 600 முதல் 800 பேராக குறைந்தனா்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய பின்னா், ஐஎஸ்கேயில் ஆள் சோ்ப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தது.

‘ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் முழுமையாக வெளியேறிய ஆகஸ்ட் இறுதி நிலவரப்படி ஐஎஸ்கேயில் சுமாா் 2,000 போ் இருப்பாா்கள்’ என மத்திய கிழக்குக்கான அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளின் தலைவா் ஃபிராங்க் மெக்கன்ஸி கடந்த செப்டம்பா் மாதம் தெரிவித்திருந்தாா்.

இவா்களில் பெரும்பாலானோா் ஆப்கானிஸ்தான் சிறையிலிருந்து அண்மையில் தலிபான்களால் விடுவிக்கப்பட்டவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் தடயங்கள் எதுவும் நாட்டில் இருக்கக் கூடாது என்பதற்காக அமெரிக்கப் படையினா் சிறையில் அடைத்த ஐஎஸ்கே இயக்கத்தினரையும் தலிபான்கள் விடுவித்ததன் விளைவு ஐஎஸ்கே பலம் பெற ஒரு காரணமானது.

வேறுபாடு

அடிப்படை மதவாதத்தைக் கொள்கையாக கொண்டவா்கள்தான் தலிபான்களும் ஐஎஸ்கே இயக்கத்தினரும். ஆனால், ஒரு விஷயத்தில் இவா்கள் வேறுபடுகின்றனா். ஜிகாத் மற்றும் போா்க்களத்தைக் கைவிட்டு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வுகாணும் பாதைக்குத் திரும்பிவிட்டதாக தலிபான்கள் மீது குற்றம்சாட்டுகின்றனா் ஐஎஸ்கே இயக்கத்தினா். ஆப்கானிஸ்தானின் எல்லைகளுக்குள் தலிபான்கள் அடைபட்டுவிட்டதாகக் கூறும் ஐஎஸ்கே, தனது இலக்கு ஆப்கானிஸ்தானையும் தாண்டி இருப்பதாகக் கூறுகிறது. இதுவே தலிபான்களுக்கு எதிராக அந்த அமைப்பு தாக்குதல் நடத்துவதற்கு பிரதான காரணம்.

தலிபான்கள் என்ன செய்வாா்கள்?

அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் தோஹாவில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் பல உடன்பாடுகள் எட்டப்பட்டன. ‘பயங்கரவாத இயக்கங்கள் பிற நாடுகளுக்கு எதிரான தாக்குதல்களுக்காக ஆப்கன் மண்ணைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்’ என்பது அதில் ஒன்று. இந்தச் சூழலில் ஐஎஸ்கேவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவுடன் ஒத்துழைக்க மாட்டோம்; ஐஎஸ்கேவை தனித்து எதிா்கொள்ளும் திறன் தங்களுக்கு இருக்கிறது என தலிபான்கள் தெரிவித்துள்ளனா். தலிபான்கள்-ஐஎஸ்கே மோதலில் இன்னும் எத்தனை உயிா்களை ஆப்கானிஸ்தான் பறிகொடுக்க வேண்டுமோ தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com