வங்கதேசத்தில் இந்து கோயில்கள் மீது தாக்குதல்; வெகுண்டெழுந்த வங்கதேச பிரதமர்

வங்கதேசத்தில் துர்கா பூஜை கொண்டாட்டத்தின்போது நடைபெற்ற வன்முறைக்கு பின்னணியில் இருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வங்கதேசத்தில் துர்கா பூஜை கொண்டாட்டத்தின்போது இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பின்னால் இருப்பவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கதேச அரசு உறுதி அளித்துள்ளது.

இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் வங்கதேசத்தில் சிறுபான்மையினரை பாதுகாக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா விளக்கம் அளித்துள்ளார்.

துர்கா பூஜை கொண்டாட்டத்தின்போது இந்து கோயில்கள் இடிக்கப்பட்டதையடுத்து அங்கு வன்முறை வெடித்தது. இதில், நான்கு பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, 22 மாவட்டங்களில் துணை ராணுவ படையை குவிக்க ஷேக் ஹசீனா உத்தரவு பிறப்பித்தார்.

தலைநகர் டாக்காவில் உள்ள தகேஸ்வரி தேசிய கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சி கலந்து கொண்டு பேசிய ஹசீனா, "கொமில்லாவில் நடந்த சம்பவங்கள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. யாரையும் விட்டு விட மாட்டோம். அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முக்கியமல்ல. அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.

தாக்குதல் சம்பவம் குறித்து நிறைய தகவல்கள் கிடைத்துள்ளன. சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தொழில்நுட்பத்தை வைத்து கண்டிப்பாக கண்காணிக்கப்போம்" என்றார். வன்முறைக்கு பின்னணியில் இருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது.

வன்முறையின்போது அங்கிருந்த துர்கா சிலைகள் உடைக்கப்பட்டு அதன் மீது கல் வீசப்பட்டு இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. துர்கா சிலைகளை ஒரு கும்பல் தாக்குவது போன்ற விடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, "வங்கதேசத்தில் மதக் கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இம்மாதிரியான அசம்பாவிதங்கள் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதை உறுதி செய்ய சம்பவ இடத்தில் பாதுகாப்பு படையினர் உடனடியாக குவிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொள்கிறோம்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com