ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்
ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்

மக்கள் குடியரசுத் தலைவர் கலாம்

நாட்டின் 11-ஆவது குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம், "மக்கள் குடியரசுத் தலைவர்' என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர்.

நாட்டின் 11-ஆவது குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம், "மக்கள் குடியரசுத் தலைவர்' என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர்.

எளிமைக்கு உதாரணம்: குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர் 5 ஆண்டுகள் வாழ்ந்தாலும் பதவிக்காலம் மட்டுமன்றி வாழ்நாள் முழுவதும் எளிமைக்கு உதாரணமாக இருந்தார். தில்லி ராஜாஜி மார்கில் வசித்து வந்த அவரை அனைவரும் எளிதில் சந்திக்க முடிந்தது. எல்லோரிடமும் பண்புடன் பேசுவார். இளம் தலைமுறையினர் மீது அளவு கடந்த நம்பிக்கையைக் கொண்டிருந்தார். குடியரசுத் தலைவராக இருந்தபோது அவரது மாளிக்கைக்குச் செல்லும் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள், கலைத் துறையைச் சேர்ந்தவர்கள், தமிழர்கள் உள்ளிட்டோரை அன்புடன் உபசரிப்பார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் தூசு படிந்திருந்த நூலகத்தை மின்னணு மயமாக்கினார். இந்தப் பணியை தமது நேரடி மேற்பார்வையில் மேற்கொண்டு இரண்டரை ஆண்டுகளில் மின்னணு நூலகம் அமைய நடவடிக்கை எடுத்தார். இப்போதும் இந்த நூலகம் குடியரசுத் தலைவர் மாளிகையின் முக்கியப் பகுதியில் ஒன்றாக பராமரிக்கப்படுகிறது.

இந்தியா 2020: கலாம் தனது 'இந்தியா 2020' என்ற புத்தகத்தில் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற திட்டங்களை முன்மொழிந்துள்ளார். கலாம் தனது ஊக்குவிக்கும் முறையிலான பேச்சுக்களால், இந்திய மாணவர் சமூகத்துடன் தொடர்ந்து கலந்துரையாடல்களை நடத்தி வந்தார். அவர், "நான் இளம் வயதினருடன், குறிப்பாக உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடன் இருக்கும்போது நிறைவாக உணர்கிறேன்' என்று கூறியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த அரசியல், திரைத்துறை உள்ளிட்ட முக்கிய ஆளுமைகளால் மிகவும் மதிக்கப்பட்டவர். வாழ்நாளில் திருக்குறளை மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தவர்.

பயணி: நாடு முழுவதும் உள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற பட்டமளிப்பு, ஆண்டு விழாக்களில் கலந்து கொண்டு இளம் தலைமுறையினரை கனவு காண ஊக்கப்படுத்தி வந்தவர். ஓய்வுக்குப் பின்னும் அவரது ஓய்வறியாப் பயணத்தைக் கண்டு அறிவியலாளர்களும், அறிஞர்களும் வியந்தனர். வெளிநாடு வாழ் இந்தியர்களும் கலாமின் உரையை கேட்க தவமிருந்தனர்.

ஆசிரியர்களுக்கு அறிவுரை: தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆசிரியர்-மாணவர், பெற்றோர்-குழந்தைகள் ஆகியோருக்கு இடையிலான இடைவெளி அதிகமாகியுள்ளதையும், தகவல் தொழில்நுட்பத்தால் நன்மைகள் கிடைத்தாலும் வன்முறையும் அதிகமாகி விட்டதையும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் அதிகமான நேரத்தை செலவு செய்ய வேண்டும் என்பதையும் பல நிகழ்வுகளில் வலியுறுத்தியுள்ளார். இன்றைய கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும். பாடச்சுமையைக் குறைக்க வேண்டும். 6-ஆம் வகுப்பு வரை பெற்றோர்கள் அரவணைப்பில் மாணவர்கள் படிக்கும்படி பாடங்கள் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

தில்லியில் கடைசி நிகழ்வு: தில்லி தலைமைச் செயலகத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை 3-ஆம் தேதி தில்லி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பேசுகையில், "அடுத்த பத்தாண்டுகளில் திறன்மிக்க 30 முதல் 50 கோடி இளைஞர்களின் தேவை இந்தியாவில் எழும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற திறன்மிக்க இளைஞர்களை உருவாக்க பல்கலைக்கழகம், இடைநிலைப் பள்ளி ஆகியவற்றின் பாடத் திட்டங்களில் முழுமையான மாற்றம் செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. குறிப்பாக 9,10,11,12 ஆகிய வகுப்புகளில் 25 சதவீதமான பள்ளிப் பாட வேளைகள் மாணவர்களின் திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட வேண்டும். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு வரும் மாணவர்களுக்கு 10, 12-ஆம் வகுப்பு சான்றிதழுடன், அவர்களுக்கு நான்கு ஆண்டுகள் அளிக்கப்பட்ட திறன் மேம்பாட்டுச் சான்றிதழும் வழங்கப்பட வேண்டும். அறிவுசார் சமூக உருவாக்கத்தில் ஆசிரியர்கள் போன்ற கல்வியாளர்களின் பங்கு அளப்பரியது' என்றார். அவர் தில்லியில் அறிவுசார் சமூகத்தைப் படைப்பது குறித்து வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின், இளைஞர்களின் கனவு நாயகராக விளங்கிய அவர், மக்கள் மனத்தில் நீங்கா இடம்பெற்ற மக்கள் குடியரசுத் தலைவராக நீடித்திருப்பார் என்பது திண்ணம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com