இந்தியாவை பாராட்டிய பைடன் அரசு; காரணம் சொன்ன நிர்மலா சீதாராமன்

முன்தேதியிட்ட வரி வசூலிக்கும் முறையை ரத்து செய்தது உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை அமெரிக்க அரசு பாராட்டியுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (கோப்புப்படம்)
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (கோப்புப்படம்)

சமீபத்தில், இந்திய அரசு மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்களை பைடன் அரசும் அமெரிக்க கார்ப்பரேட் துறை தலைவர்களும் வரவேற்றுள்ளனர் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க சென்றுள்ள அவர் வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கி நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் கலந்து கொண்டார். இதையடுத்து, அவர் நியூயார்க் செல்லவுள்ளார். அதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், "முன்தேதியிட்ட வரி வசூலிக்கும் முறையை ரத்து செய்தது உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை நேர்மறையான நடவடிக்கை என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

கார்ப்பரேட் துறை தலைவர்களும் அந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த முடிவு சில காலத்திற்கு பிறகு எடுக்கப்பட்டபோதிலும், பெரும்பாலான வணிகர்கள் அதை துணிச்சலான முடிவு என்கிறார்கள். முன்னதாக, சட்ட ரீதியாக பல கட்டாயங்கள் இருந்ததை அவர்களிடம் எடுத்துரைத்தேன். பல வழக்குகளில் முறையான தீர்வுகள் கிடைப்பதற்காக காத்திருந்தோம்.

சட்ட ரீதியாக தீர்வு கிடைத்தவுடன், நாடாளுமன்றத்தில் முன்தேதியிட்ட வரி வசூலிக்கும் முறையை ரத்து செய்தோம். மிக மேர்மறையான நடவடிக்கை என பலரும் வரவேற்றுள்ளனர்" என்றார். அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "நாங்கள் அதைப் பற்றி பேசினோம். இரு நாடுகளும் பேச்சுவார்த்தையை முன்னெடுத்து விரைவாக முடிக்க விரும்புகிறோம்.

ஆனால், வர்த்தகத்திலேயே பெரிய பிரச்சினை உள்ளது. இதில், இந்திய வர்த்தகத்துறை அமைச்சகம் அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சகத்துடன் இணைந்து பணியாற்றிவருகிறது. எனவே, அந்த விவகாரத்தில் நான் முழுமையாக ஈடுபடவில்லை" என்றார். நியூயார்க்கில் தொழிலதிபர்களுடன் கலந்துரையாடிய பின்னரே அவர் இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.

முன்னதாக, வர்த்தகத்துறை, பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தபோது, அமெரிக்க - இந்திய உறவில் நிர்மலா சீதாராமன் முக்கிய பங்காற்றியிருந்தார்.  கரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, முதல்முறையாக, நிர்மலா சீதாராமன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். சர்வதேச நிதியம், உலக வங்கி கூட்டங்கள் மட்டும் இன்றி, 25க்கும் மேற்பட்ட இருதரப்பு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com