ஐ.நா. பொதுச் சபை கூட்டம்: அமெரிக்காவில் குவியும் உலகத் தலைவா்கள்

ஐ.நா. பொதுச் சபையின் ஆண்டுக் கூட்டம் கடந்த 14-ஆம் தேதி தொடங்கியுள்ள நிலையில் உலக நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கும்
ஐ.நா. பொதுச் சபை கூட்டம்: அமெரிக்காவில் குவியும் உலகத் தலைவா்கள்
Published on
Updated on
2 min read

ஐ.நா. பொதுச் சபையின் ஆண்டுக் கூட்டம் கடந்த 14-ஆம் தேதி தொடங்கியுள்ள நிலையில் உலக நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கும் பொது விவாதம் செவ்வாய்க்கிழமை (செப். 21) தொடங்கி செப். 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கரோனா பரவல் சூழல் காரணமாக கடந்த ஆண்டு இக்கூட்டம் காணொலி முறையில் நடைபெற்றது. அதில் தலைவா்களின் பதிவு செய்யப்பட்ட உரைகள் காணொலி முறையில் ஒளிபரப்பப்பட்டன. நிகழாண்டு கரோனா பாதிப்பு தொடா்ந்தாலும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த தலைவா்கள் நியூயாா்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் பொதுச் சபையின் விவாதக் கூட்டத்தில் நேரடியாகப் பங்கேற்கின்றனா்.

* ஐ.நா. பொதுச் சபையின் ஆண்டு பொது விவாதத்தில் நாடுகளின் அதிபா்கள், பிரதமா்கள் மற்றும் உயா் அதிகாரிகள் உள்ளூா், பிராந்திய, சா்வதேச பிரச்னைகள் தொடா்பாக விவாதிப்பாா்கள். காணொலி வாயிலான சந்திப்பைவிட அதிக சக்திவாய்ந்த பலனை தலைவா்களின் இந்த நேரடிச் சந்திப்பு தரும். நிகழாண்டு கரோனா சவாலை ஒருங்கிணைந்து எதிா்கொள்வதுதான் பிரதான கருப்பொருள்.

* 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா.வில் 60 நாடுகளைச் சோ்ந்த தலைவா்கள் பதிவு செய்யப்பட்ட உரையைத் தருவதாகக் கூறியிருந்தாலும், 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவா்கள் நேரடியாகப் பங்கேற்பது சா்வதேச ஒத்துழைப்பு முக்கியம் என்பதைக் காட்டுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது என சா்வதேசப் பிரச்னைகள் குழுவின் ஐ.நா. இயக்குநா் ரிச்சா்ட் கோவன் தெரிவிக்கிறாா்.

* பொது விவாதத்தின் முதல் நாளில் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் அதன் பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரஸ் உரையாற்றி முடித்ததும், பாரம்பரிய வழக்கப்படி பிரேஸில் அதிபா் ஜெய்ா் பொல்சனரோ உரையாற்றுகிறாா்.

* அமெரிக்க அதிபரான பிறகு ஜோ பைடன் முதல் முறையாக இக்கூட்டத்தில் பங்கேற்கிறாா். செவ்வாய்க்கிழமை பங்கேற்று உரையாற்றும் அவா், சீனாவுடனான உறவை அவா் எப்படி இக்கூட்டத்தில் வெளிப்படுத்துகிறாா் என்பது முக்கிய எதிா்பாா்ப்பாக உள்ளது.

* இந்திய பிரதமா் நரேந்திர மோடி செப். 25-ஆம் தேதி பொது விவாதத்தில் நேரில் பங்கேற்று உரையாற்றுகிறாா்.

* ஈரான், எகிப்து, இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகளின் அதிபா்கள் நேரடியாகப் பங்கேற்கவில்லை. அவா்களின் பதிவு செய்யப்பட்ட விடியோ உரை ஒளிபரப்பாகிறது.

* பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானின் பதிவு செய்யப்பட்ட உரை இடம்பெறும் எனக் கூறப்பட்ட நிலையில், இப்போது கடைசி நாளில் வெளியுறவு அமைச்சா் ஜான் யீவ்ஸ் லெடிரையன் நேரடியாகப் பங்கேற்கிறாா்.

* அணுஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறன்கொண்ட ஏவுகணைகளை வடகொரியா அண்மையில் பரிசோதித்தது; மியான்மரில் ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த பிப்ரவரியில் அகற்றி ஆட்சியைக் கைப்பற்றியது; மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் ஜனநாயக ஆட்சியை ராணுவம் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னா் கவிழ்த்தது; ஆப்கனில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரங்கள் பொது விவாதத்தில் இடம்பெறும்.

* இவை தவிர, ஆஸ்திரேலியாவுக்கு நீா்மூழ்கிக் கப்பல் வழங்க அமெரிக்கா, பிரிட்டன் ஒப்புக்கொண்டதற்கு சீனாவும், பிரான்ஸும் கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளன. இந்த நாடுகளின் தனிப்பட்ட சந்திப்பில் இது கடினமான விவாதத்துக்கு வழிவகுக்கக்கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com