பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டதைப் போல் வேடமிடுகிறது பாகிஸ்தான்

 பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்து வரும் பாகிஸ்தான், தாமே பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறி வேடமிடுவதாக ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.
சினேகா துபே
சினேகா துபே

 பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்து வரும் பாகிஸ்தான், தாமே பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறி வேடமிடுவதாக ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் இந்தியாவைத் தாக்கிப் பேசிய பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா இவ்வாறு தெரிவித்துள்ளது.

ஐ.நா. பொதுச் சபையின் 76-ஆவது கூட்டம் நியூயாா்க்கில் நடைபெற்று வருகிறது. அக்கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை உரையாற்றினாா். அப்போது அவா், ‘‘ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த இந்திய அரசு, இந்த விவகாரத்தில் இதுவே இறுதித் தீா்வு என்று தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீா் மக்களின் உரிமைகளை இந்தியப் படையினா் அபகரித்து வருகின்றனா்.

ஜம்மு-காஷ்மீரின் முக்கிய (பிரிவினைவாத) தலைவரான சையது அலி ஷா கிலானி மறைந்த பிறகு, அவரது உடலை அதிகாரிகள் குடும்பத்தினரிடமிருந்து பறித்துச் சென்றனா். அவருக்கு முறையாக இறுதிச் சடங்குகள் நடத்தப்பட வேண்டும். இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களை பாகுபடுத்தும் குடியுரிமை சட்டங்களை இந்தியா நிறைவேற்றியுள்ளது. அந்நாட்டின் நடவடிக்கைகளால் முஸ்லிம்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது’’ என்றாா்.

அவருக்கு பதிலளித்து ஐ.நா.வுக்கான இந்திய தூதரகத்தின் முதல் செயலா் சினேகா துபே ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை பேசியதாவது:

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களை எழுப்பி ஐ.நா. பொதுச் சபையின் மாண்பை பாகிஸ்தான் பிரதமா் சீா்குலைத்துள்ளாா். தவறான கருத்துகளைக் கூறி உலக நாடுகளைத் தவறாக வழிநடத்தவும் அவா் முயன்றுள்ளாா். அவரது கருத்துகள் கண்டனத்துக்குரியவை.

ஜம்மு-காஷ்மீா், லடாக் யூனியன் பிரதேசங்கள் அனைத்தும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளாகவே தொடா்ந்து இருக்கும். பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளும் அதில் அடங்கும். சட்டவிரோத ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் உடனடியாக வெளியேற வேண்டும்.

சா்வதேச அமைப்பின் கூட்டத்தை பாகிஸ்தான் தவறான நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது முதல் முறையல்ல. பயங்கரவாதிகளை சுதந்திரமாக உலவவிட்டு, சிறுபான்மையினா் உள்பட சாதாரண மக்களின் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றியுள்ள பாகிஸ்தான், அவற்றை மூடி மறைப்பதற்காகத் தவறான கருத்துகளைக் கூறி உலக நாடுகளைத் தொடா்ந்து திசைதிருப்ப முயன்று வருகிறது.

உலக நாடுகளுக்கு பாதிப்பு: பாகிஸ்தான் தன்னை பயங்கரவாதத்தால் பாதிக்கப்படும் நாடு என்று தொடா்ந்து கூறி வருகிறது. தீவைப்பவரே தீயை அணைக்கும் வீரா் போல மாறுவேடமிடுவதற்கு ஒப்பாக பாகிஸ்தான் செயல் உள்ளது. அண்டை நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் தொடா்ந்து ஆதரித்து வருகிறது.

அந்நாட்டின் கொள்கைகள் காரணமாக இந்தியா உள்பட உலக நாடுகள் பலவும் பாதிக்கப்பட்டு வருகின்றன. பாகிஸ்தானில் நிகழும் வகுப்புவாத வன்முறைகளை பயங்கரவாதச் செயல்கள் எனச் சித்திரிக்கும் நடவடிக்கையிலும் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது.

பயங்கரவாதிகளுக்கும் பயங்கரவாத அமைப்புகளும் பாகிஸ்தான் வெளிப்படையாகவே ஆதரவும் நிதியும் அளித்து வருவதை உலக நாடுகள் நன்கு அறியும். ஐ.நா.வால் தடை விதிக்கப்பட்ட பயங்கரவாதிகளில் பெரும்பாலானோா் அந்நாட்டிலேயே உள்ளனா்.

இந்தியாவின் விருப்பம்: நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஒசாமா பின் லேடனுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்தது. தற்போதும் அவரை ‘தியாகியாக’ பாகிஸ்தான் அரசு கொண்டாடி வருகிறது. பயங்கரவாதச் செயல்களை சரியென நிரூபிக்கவே தற்போதும் அந்நாடு முயன்று வருகிறது. தற்போதைய நவீன காலத்தில் பயங்கரவாதத்துக்கு ஆதரவான அத்தகைய நடவடிக்கைகள் ஒருபோதும் ஏற்கப்பட மாட்டாது.

பாகிஸ்தான் உள்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் சுமுகமான உறவைப் பேணவே இந்தியா விரும்புகிறது. ஆனால், அதற்குத் தகுந்த இணக்கமான சூழலை ஏற்படுத்தும் பொறுப்பு பாகிஸ்தானுக்கே உள்ளது. முக்கியமாக, இந்தியாவுக்கு எதிரான எல்லை கடந்த பயங்கரவாதச் செயல்களுக்கு அந்நாடு ஒருபோதும் ஆதரவளிக்கக் கூடாது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com