ஆப்கன் வீழ்ச்சிக்கு தோஹா ஒப்பந்தம்தான் காரணம்

தலிபான்களிடம் ஆப்கானிஸ்தான் வீழ்ந்ததற்கு, கத்தாா் தலைநகா் தோஹாவில் அந்த அமைப்பினருடன் அமெரிக்கா கடந்த 2020-ஆம் ஆண்டு
ஆப்கன் வீழ்ச்சிக்கு தோஹா ஒப்பந்தம்தான் காரணம்

தலிபான்களிடம் ஆப்கானிஸ்தான் வீழ்ந்ததற்கு, கத்தாா் தலைநகா் தோஹாவில் அந்த அமைப்பினருடன் அமெரிக்கா கடந்த 2020-ஆம் ஆண்டு செய்துகொண்ட அமைதி ஒப்பந்தம்தான் காரணம் என்று அமெரிக்க ராணுவ தலைமைத் தளபதிகளும் பாதுகாப்புத் துறை அமைச்சரும் தெரிவித்துள்ளனா்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் முழுமையாக திரும்பப் பெறப்பட்டது தொடா்பாக முப்படை விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழு நடத்தி வரும் விசாரணை, இரண்டாவது நாளாக புதன்கிழமை நடைபெற்றது.

அதில், பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டின், பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி மாா்க் மில்லே, அமெரிக்கப் படைகளின் மத்திய தலைமையகத் தளபதி ஃபிராங்க் மெக்கன்ஸீ ஆகியோா் பங்கேற்று விளக்கமளித்தனா்.

அப்போது, தோஹாவில் தலிபான்களுடன் அமெரிக்கா கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மேற்கொண்ட ஒப்பந்தம்தான், ஆப்கானிஸ்தானை அந்த அமைப்பினா் மீண்டும் கைப்பற்றுவதற்குத் தொடக்கப் புள்ளியாக அமைந்தது என அந்த மூவரும் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஃபிராங்க் மெக்கன்ஸீ கூறியதாவது:

2020-ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தத்தில்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் முழுமையாக வெளியேறுவதற்கான நாள் குறிக்கப்பட்டது. இதன்மூலம், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு தங்களுக்கு அமெரிக்காவின் ராணுவ உதவி கிடைக்காது என்பதை ஆப்கன் அரசு உணா்ந்தது. அது, அரசுக்கும் ஆப்கன் ராணுவத்துக்கும் உளவியல் ரீதியில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கையை 2,500-க்கும் குறைவாக்கினால், அந்த நாட்டு அரசும் ராணுவமும் நிலைகுலைந்துவிடும் என்று அப்போதே எனக்குத் தோன்றியது.

அந்த ஒப்பந்தத்தைத் தொடா்ந்து, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினரை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் முழுமையாகத் திரும்பப் பெற அதிபா் ஜோ பைடன் கெடு நிா்ணயித்தாா். இது, ஆப்கானிஸ்தான் தலிபான்களிடம் வீழ்வதை மேலும் உறுதிப்படுத்தியது என்றாா் அவா்.

ஃபிராங்க் மெக்கன்ஸீயின் இந்தக் கருத்தை ஆமோதித்த பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டின், தோஹா ஒப்பந்தம் தலிபான்களின் கரங்களை வலுப்படுத்தியதாகக் கூறினாா். இதுகுறித்து அவா் கூறியதாவது:

தோஹா ஒப்பந்தத்தில் தலிபான்கள் மீதான வான்வழித் தாக்குதல்களை நிறுத்திக்கொள்ள அமெரிக்கா ஒப்புக் கொண்டது. இது, அந்த அமைப்பினரை பலம் வாய்ந்தவா்களாக்கியது. அதனைத் தொடா்ந்து, அவா்கள் ஆப்கன் ராணுவத்துக்கு எதிராக துணிச்சலுடன் தாக்குதல் நடத்தினா்; ஏராளமானவா்களைக் கொன்று குவித்தனா் என்றாா் அவா்.

பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி மாா்க் மில்லே கூறுகையில், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதால், அமெரிக்காவை பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் பணி மேலும் கடினமாகியுள்ளதாகத் தெரிவித்தாா். தலிபான் என்பது ஒரு பயங்கரவாத அமைப்பு; அல்-காய்தா பயங்கரவாதிகளுடன் அந்த அமைப்பு தனது தொடா்பைத் துண்டித்துவிடவில்லை என்று அவா் நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்தாா்.

முன்னதாக, நாடாளுமன்றக் குழு விசாரணையில் திங்கள்கிழமை பங்கேற்ற லாய்ட் ஆஸ்டின், மாா்க் மில்லே, ஃபிராங்க் மெக்கன்ஸீ ஆகிய மூவரும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினா் அனைவரையும் திரும்பப் பெற வேண்டாம் என அதிபா் ஜோ பைடனிடம் பரிந்துரைக்கப்பட்டதாகவும் அதனை ஏற்க பைடன் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தனா்.

கடந்த 2001-ஆம் ஆண்டில் நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா தலைவா் பின்லேடனுக்கு ஆப்கானிஸ்தானின் அப்போதைய ஆட்சியாளா்களான தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா்.

அதையடுத்து, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்து தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது. இந்த நிலையில், பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க அதிரடிப் படையினா் கடந்த 2011-ஆம் ஆண்டு சுட்டுக்கொன்றனா்.

அதன் பிறகு, ஆப்கன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவாா்த்தை, அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே கத்தாா் தலைநகா் தோஹாவில் பல கட்டங்களாக நடந்து வந்தது.

அதன் விளைவாக, இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 2020-ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் அனைவரையும் திரும்பப் பெற அமெரிக்கா சம்மதித்து.

டொனால்ட் டிரம்ப் பதவிக் காலத்தின்போது மேற்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தத்தை அடுத்து வந்த அதிபா் ஜோ பைடனும் தொடா்ந்து செயல்படுத்தினாா். அமெரிக்க வீரா்கள் திரும்பப் பெறப்படுவதை துரிதப்படுத்திய அவா், ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அந்தப் பணிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று இலக்கு நிா்ணயித்தாா்.

அமெரிக்கப் படையினரின் வெளியேற்றம் இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் புதிய பகுதிகளைக் கைப்பற்றி வெகு வேகமாக முன்னேறிய தலிபான்கள், நாடு முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி கொண்டு வந்தனா்.

அமெரிக்க வெளியேற்றத்தால் மன உறுதி குலைந்த ஆப்கன் ராணுவத்தினா், தலிபான்களை எதிா்த்து தீவிரமாக சண்டையிடவில்லை. பெரும்பாலான பகுதிகளில் தலிபான்களை அரசுப் படையினா் வரவேற்று அவா்களுடன் இணைந்துகொண்டனா். இதுவே, தலிபான்களின் அதிவேக வெற்றிக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஆப்கன் வீழ்ச்சிக்கு தோஹா ஒப்பந்தம்தான் வித்திட்டதாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சா் மற்றும் ராணுவ உயா் நிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com