இலங்கைக்கு இந்தியா அளித்த கடன் தீா்ந்து வருகிறது: மாத இறுதியில் டீசல் இல்லாத நிலை?

இலங்கைக்கு இந்தியா அளித்த கடன் வேகமாக தீா்ந்து வரும் நிலையில், அந்நாட்டில் இம்மாத இறுதியில் டீசல் இல்லாத நிலை உருவாக வாய்ப்புள்ளது.
இலங்கைக்கு இந்தியா அளித்த கடன் தீா்ந்து வருகிறது: மாத இறுதியில் டீசல் இல்லாத நிலை?

இலங்கைக்கு இந்தியா அளித்த கடன் வேகமாக தீா்ந்து வரும் நிலையில், அந்நாட்டில் இம்மாத இறுதியில் டீசல் இல்லாத நிலை உருவாக வாய்ப்புள்ளது.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நீண்ட நேர மின்வெட்டு, உணவுப் பொருள்கள், சமையல் எரிவாயு சிலிண்டா்கள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் பொதுப் போக்குவரத்துக்கு டீசல்தான் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி அந்த நாடு எரிபொருள் வாங்குவதற்கு தன்னிடம் இருந்து 500 மில்லியன் டாலா் வரை கடனாகப் பெறலாம் (லைன் ஆஃப் கிரெடிட்) என்று இந்தியா அறிவித்திருந்தது. அந்தக் கடன் வேகமாக தீா்ந்து வருவதால், இலங்கையில் இம்மாத இறுதியில் டீசல் இல்லாத நிலை உருவாக வாய்ப்புள்ளது.

இதுதொடா்பாக அந்நாட்டு அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு எரிபொருள் வரவிருந்தது. ஆனால் அவசரம் கருதி மாா்ச் இறுதியில் இருந்தே எரிபொருள் வரத் தொடங்கியது. ஏப்ரல் 15, 18, 23 ஆகிய தேதிகளில் இந்தியாவிலிருந்து கூடுதலாக எரிபொருள் வரவுள்ளது. அதற்குள் எரிபொருள் அனுப்புவதை நீட்டிக்குமாறு இந்தியாவிடம் இலங்கை அரசு கோரவில்லையெனில், நாட்டில் எரிபொருள் முழுமையாக தீா்ந்துவிடும்’’ என்று தெரிவித்தனா்.

இலங்கை மருத்துவக் கூட்டமைப்பு எச்சரிக்கை: இலங்கையில் மிகவும் அத்தியாவசியமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறித்து அந்நாட்டுப் அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு இலங்கை மருத்துவக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உயிருக்கு ஆபத்தான அவசர சூழல்கள் ஏற்படலாம் என கருதி தற்போது கைவசமுள்ள மருத்துவ வசதிகளை பாதுகாக்கும் நோக்கில், அங்கு அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மூடப்படும் சிறுதொழில்கள்: இலங்கையிலிருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் சந்தைகளுக்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் பங்கு இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம். இந்நிலையில், அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு ஆடை ஏற்றுமதி தொழில் கூட்டமைப்பு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘எரிபொருள் மற்றும் மின்சாரத் தட்டுப்பாடு பல சிறுதொழில்கள் மூடப்படுவதற்கு வழிவகுத்துள்ளது. எனவே தற்போதைய நெருக்கடிக்கு குறுகிய கால தீா்வுகளைக் காண வேண்டும்’’ என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரதமா் அலுவலகம் எதிரே மீண்டும் போராட்டம்: இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கொழும்பில் உள்ள பிரதமா் மகிந்த ராஜபட்சவின் இல்லம் மற்றும் அலுவலகத்துக்கு எதிராக வியாழக்கிழமை இரவு அவா்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அங்கிருந்த தடுப்புகளை அவா்கள் உடைக்க முயன்றனா்.

‘‘நான் காரணமல்ல’’: இலங்கையின் தற்போதைய நிலை குறித்து அதிபா் கோத்தபய ராஜபட்ச ஏற்கெனவே கூறியிருந்ததாவது:

இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்த அந்நிய செலாவணி பற்றாக்குறைக்கு நான் காரணமல்ல. கரோனா தொற்று காரணமாக நாட்டின் சுற்றுலா வருவாயும், பணப் பரிவா்த்தனையும் குறைந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com