இலங்கையில் வட்டி விகிதங்கள் இரு மடங்காக உயர்வு: மத்திய வங்கி

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை இரு மடங்காக உயர்த்தி உள்ளது மத்திய வங்கி. 
இலங்கையில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடும் மக்கள்.
இலங்கையில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடும் மக்கள்.


கொழும்பு: இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை இரு மடங்காக உயர்த்தி உள்ளது மத்திய வங்கி. 

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நீண்ட நேர மின்வெட்டு, உணவுப் பொருள்கள், சமையல் எரிவாயு சிலிண்டா்கள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் பொதுப் போக்குவரத்துக்கு டீசல்தான் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இலங்கையில் மிகவும் அத்தியாவசியமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறித்து அந்நாட்டுப் அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு இலங்கை மருத்துவக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உயிருக்கு ஆபத்தான அவசர சூழல்கள் ஏற்படலாம் என கருதி தற்போது கைவசமுள்ள மருத்துவ வசதிகளை பாதுகாக்கும் நோக்கில், அங்கு அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இலங்கையிலிருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் சந்தைகளுக்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் பங்கு இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவிகிதம் தான்.

இந்நிலையில், அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு ஆடை ஏற்றுமதி தொழில் கூட்டமைப்பு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘எரிபொருள் மற்றும் மின்சாரத் தட்டுப்பாடு பல சிறுதொழில்கள் மூடப்படுவதற்கு வழிவகுத்துள்ளது. எனவே தற்போதைய நெருக்கடிக்கு குறுகிய கால தீா்வுகளைக் காண வேண்டும்’’ என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் ஐந்து நாள்கள் அவசரகால நிலை மற்றும் இரண்டு நாள் ஊரடங்கு உத்தரவு இருந்தபோதிலும், மக்கள் ஆளும் அரசுக்கு எதிராக ஒரு மாதத்திற்கு மேலாக இடைவிடாது வீதிகளுக்கு வந்து பகல், இரவு என போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்த அந்நிய செலாவணி பற்றாக்குறைக்கு நான் காரணமல்ல. கரோனா தொற்று காரணமாக நாட்டின் சுற்றுலா வருவாயும், பணப் பரிவா்த்தனையும் குறைந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று அதிபா் கோத்தபய ராஜபட்ச தெரிவித்திருந்த நிலையிலும், கொழும்பில் உள்ள பிரதமா் மகிந்த ராஜபட்சவின் இல்லம் மற்றும் அலுவலகத்துக்கு எதிரே மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், இலங்கையில் பேரழிவு தரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அடிப்படைப் பொருள்களின் பற்றாக்குறையால் உயர்ந்துள்ள பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அதன் முக்கிய வட்டி விகிதங்களை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளது மத்திய வங்கி. 

இலங்கை மத்திய வங்கியின் கடனுக்கான வட்டி விகிதம் மற்றும் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 700 அடிப்படை புள்ளிகள் என்ற அளவில் கடனுக்கான வட்டி விகிதத்தை 14.50 சதவிகிதமாகவும், அதன் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 13.50  சதவிகிதம் வரை உயர்ந்தியுள்ளது. 
மார்ச் மாதத்தில் பணவீக்கம் 18.7 சதவிகிதமாக இருந்தது.

மொத்த தேவையின் அதிகரிப்பு, உள்நாட்டு விநியோக தடைகள், உள்ளூர் நாணயத்தின் சரிவு மற்றும் உலகளவில் பொருள்களின் விலைகள் உயர்வு ஆகியவை பணவீக்கத்தின் அழுத்தத்திற்கு காரணமாக இருக்கக்கூடும் என்று மத்திய வங்கிய தனது பணவியல் கொள்கை முடிவு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பி. நந்தலால் வீரசிங்க கூறுகையில், மத்திய வங்கியை எந்தவித வெளிச் செல்வாக்கும் இன்றி சுயாதீனமாக நடத்த விரும்புவதாகவும், அதற்கான அதிகாரம் தமக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தப்பட்டு வருவதாக கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com