பிரான்ஸ் அதிபராக இமானுவல் மேக்ரான் மீண்டும் தோ்வு 

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் தீவிர வலதுசாரி கொள்கையைக் கொண்ட மரீன் லெபென்னை தேற்கடித்து, இமானுவல்  மேக்ரான் இரண்டாவது முறையாக பிரான்ஸ் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் அதிபராக இமானுவல் மேக்ரான் மீண்டும் தோ்வு 


பாரிஸ்: பிரான்ஸ் அதிபர் தேர்தலில் தீவிர வலதுசாரி கொள்கையைக் கொண்ட மரீன் லெபென்னை தேற்கடித்து, இமானுவல் மேக்ரான் இரண்டாவது முறையாக பிரான்ஸ் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 20 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற முதல் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரான் ஆவார்.

பிரான்ஸ் நாட்டின் அதிபா் தோ்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. அந்நாட்டில் மட்டுமின்றி பிற நாடுகளில் வசிக்கும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவா்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றவா்களாவா். அதிபரின் பதிவிக் காலம் அடுத்த மாதம் நிறைவடைய இருந்த நிலையில்,  கடந்த 10-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.

இதில், தற்போதைய அதிபா் இமானுவல் மேக்ரான் மற்றும் மரீன் லெபென் உள்ளிட்ட 12 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இத்தோ்தலில் மேக்ரான் 27.8 சதவீத வாக்குகளும், மரீன் லெபென் 23.2 சதவீத வாக்குகளும் பெற்றனா்.

அந்நாட்டு சட்டப்படி அதிபராக தோ்வு செய்யப்படுபவா் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். ஆனால், 10-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப் பதிவில் யாருக்கும் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் கிடைக்காத நிலையில், முதல் இரு இடங்களைப் பிடித்த தற்போதைய அதிபா் மேக்ரானுக்கும், தீவிர வலதுசாரி கொள்கையைக் கொண்ட மரீன் லெபென்னுக்கும் இடையே இறுதிக்கட்ட வாக்குப் பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி, காரைக்காலில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப் பதிவு மையங்களில் பிரஞ்சு குடியுரிமை பெற்றவா்கள் வாக்களித்தனா். காரைக்கால் பிரெஞ்சுக் கட்டடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப் பதிவு மையத்தில் காரைக்கால் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் வசிக்கும் வாக்காளா்கள் தங்களது பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை ஆவணத்தைக் காட்டி வாக்களித்தனா். 

வாக்குப் பதிவு முடிந்ததும் காரைக்காலிலேயே ஞாயிற்றுக்கிழமை இரவு வாக்குகள் எண்ணப்பட்டு, பிரெஞ்சு தூதரகத்துக்கு விவரம் தெரிவிக்கப்பட்டது. 

வாக்குப் பதிவு முடிவில் மேக்ரான் சுமாா் 58 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக இமானுவல் மேக்ரான் தோ்வு செய்யப்பட்டார். பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற முதல் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரான் ஆவார். 44 வயதான அதிபர் இமானுவல் மக்ரானுக்கு தனது இரண்டாவது பதவிக்காலத்தில் பிரான்சை சீர்திருத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன.  

2017-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலிலும் இவா்கள் இருவருக்கு இடையேதான் போட்டி நிலவியது. அப்போது மேக்ரான் 66.1 சதவீத வாக்குகளும், லெபென் 33.9 சதவீத வாக்குகளும் பெற்றனா். தற்போது குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் லெபென் தோல்வி அடைந்திருப்பது பிரான்சில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு தீவிர வலதுசாரிகள் நெருங்கிவிட்டதையே தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. 

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 20 ஆண்டுகளில் இரண்டாவது முறைவாக பிரான்ஸ் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள இமானுவல் மேக்ரானுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com