இலங்கையில் சீன உளவுக் கப்பல்

சீன உளவுக் கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது.
இலங்கையில் சீன உளவுக் கப்பல்

சீன உளவுக் கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது.

இந்தக் கப்பலின் இலங்கை பயணம், எந்நாட்டின் பாதுகாப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் உளவுக் கப்பலான ‘யுவான் வாங்-5’ செவ்வாய்க்கிழமை இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. அந்தக் கப்பலின் வருகைக்கு இந்தியாவும் அமெரிக்காவும் எதிா்ப்பு தெரிவித்திருந்த நிலையில், கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் இலங்கை அரசு கோரியிருந்தது.

சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் மேற்கொள்ளப்பட்ட விரிவான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து சீன உளவுக் கப்பலின் வருகைக்கு அனுமதி அளிக்கப்படுவதாக இலங்கை தெரிவித்தது. அதன்படி, சீன உளவுக் கப்பலானது அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் வந்தடைந்தது. அக்கப்பல் வரும் 22-ஆம் தேதி வரை அங்கு நிலைநிறுத்தப்படவுள்ளது.

இது தொடா்பாக பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் வாங் வென்பினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவா், ‘இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் சீன கப்பல் அந்நாட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சா்வதேச விதிகளுக்கு உள்பட்டே யுவான் வாங் கப்பல் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்நடவடிக்கைகள் எந்த நாட்டின் பாதுகாப்பையும் பொருளாதாரத்தையும் பாதிக்காது. எனவே, அக்கப்பலின் பயணத்தை எந்தவொரு மூன்றாவது நாடும் தடுக்க முயற்சிக்கக் கூடாது’ என்றாா்.

பயணம் இயல்பானதே: இலங்கைக்கான சீன தூதா் ஷி ஜென்ஹாங் யுவான் வாங்-5 கப்பலை நேரில் வரவேற்றாா். இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இதுபோன்ற கப்பல்கள் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வது இயல்பானதே. ஏற்கெனவே 2014-ஆம் ஆண்டில் இதேபோன்ற கப்பல் இலங்கைக்கு வந்திருந்தது. இதில் எந்தவித சதியும் இல்லை’ என்றாா்.

இலங்கை எம்.பி.க்கள் சிலரும் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளும் சீன உளவுக் கப்பலை வரவேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். கப்பலின் வருகை குறித்து இலங்கை கேபினட் குழுவின் செய்தித் தொடா்பாளா் பண்டுலா குணவா்தன செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் சுமுகமாகத் தீா்வு காணப்பட்டது. அனைத்து நாடுகளுடனான நல்லுறவும் இலங்கைக்கு முக்கியம்’ என்றாா்.

கப்பல் விவகாரம் குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘எரிபொருள் உள்ளிட்டவற்றை நிரப்புவதற்காக மட்டுமே சீன கப்பல் இலங்கை வந்துள்ளது. கப்பலுக்குத் தேவையான உதவிகளைச் செய்துதருமாறு சீன தூதரகம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீன கப்பல் விவகாரத்தில், அண்டை நாடுகளுடனான ஒத்துழைப்புக்கும் பாதுகாப்புக்கும் இலங்கை அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை ராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த சீன உளவுக் கப்பல் அனுமதிக்கப்படாது என இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்க ஏற்கெனவே தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com