பெருவில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல்: 20 பேர் காயம்!

தெற்கு பெருவியன் நகரமான அண்டாஹூய்லாசனில் சனிக்கிழமை போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு காவல்துறை அதிகாரிகள் உள்பட 20 பேர்
பெருவில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல்: 20 பேர் காயம்!
Published on
Updated on
2 min read

லிமா(பெரு): தெற்கு பெருவியன் நகரமான அண்டாஹூய்லாசனில் சனிக்கிழமை போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு காவல்துறை அதிகாரிகள் உள்பட 20 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

பெருவில் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. 2020 இல் மட்டும் 5 நாளில் 3 அதிபர்களை தேர்வு செய்தது. 

இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடதுசாரியான பெட்ரோ காஸ்டிலோ, வலதுசாரியான கெய்கோவை வீழ்த்தி பெருவின் அதிபரானார். 

இந்த நிலையில்  காஸ்டிலோ மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஆனால், தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் தன்னை பதவியில் இருந்து நீக்குவதற்கான சதித்திட்டத்தின் ஒரு பகுதி எனக் கூறி நிராகரித்தார். மேலும்,  தனது தேர்தல் வெற்றியை ஏற்கத் தவறியவர்களிடமிருந்து தனக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிரான சூனிய வேட்டையின் விளைவாகும். எந்தவொரு விசாரணைக்கும் ஒத்துழைக்க தயார் என்று கூறினார். 

இதனைத் தொடர்ந்து சில நாள்களுக்கு முன்பு, அந்நாட்டின் தொலைக்காட்சி தோன்றி, நாட்டில் அவசர நிலை அமல்படுத்தப்போவதாகவும், நாடாளுமன்றத்தை கலைக்கப்படும். மேலும், நாட்டு மக்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்தும் விதமாக ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த அரசை அமைக்கப்போவதாக அறிவித்தார். இது அந்நாட்டு அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்து அமைச்சர்கள் பலரும் பதவியை ராஜிநாமா செய்தனர். அதிபரின் முடிவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்தனர். அதிபர் தனது முடிவை திரும்பப்பெற வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது.  

இந்த நிலையில், எதிர்க்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அந்நாட்டு நாடாளுமன்றம் கூடிய அவருக்கு எதிராக பதவியைப் பறிக்கும் தீர்மானத்தை கொண்டு வந்து புதன்கிழமை நிறைவேற்றியது. தீர்மானத்துக்கு ஆதரவாக 101 வாக்குகளும், எதிராக 6 வாக்குகளும்,10 பேர் மட்டும் வாக்கெடுப்பை புறக்கணித்தனர். 

இதையடுத்து காஸ்டிலோ அதிபர் பதவியை இழந்தார். அதிபர் பதவியை இழந்த அடுத்த சில நிமிடங்களிலேயே காஸ்டிலோ கைது செய்யப்பட்டார்.  உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஏழு நாள் நீதிமன்ற காவலில் உள்ளார் காஸ்டிலோ. 

காஸ்டிலோ பதவி நீக்கத்திற்குப் பிறகு, 60 வயதான வழக்குரைஞரான பெருவின் துணை அதிபர் டினா பொலுவார்டே அதிபராகப் பதவியேற்றார்.

பின்னர் அவர் பேசுகையில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க அரசியல் சண்டை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தார். நான் கேட்பது ஒரு இடம். நாட்டை மீட்பதற்கான நேரம் தர வேண்டும் என்று கூறினார். 

இதையடுத்து அரசியல் அமைப்பின் ஒழுங்கினை தாங்கள் மதிப்பதாக நாட்டின் காவல்துறையும், ஆயுதப்படைகளும் கூட்டாக தெரிவித்தன.

இந்நிலையில், முன்னாள் அதிபர் பெட்ரோ காஸ்டிலோவுக்கு ஆதரவாக நாட்டின் பல நகரங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே, போராட்டகாரர்கள் "தங்கள் போராட்டங்களின் போது வன்முறைகளில் ஈடுபட வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தது." 

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்டஹுவேலாஸ் நகரில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். 

போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் 4 போலீசார் உள்பட 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதலில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.  போராட்டக்காரர்களால் சிறைபிடிக்கப்பட்ட இரண்டு காவல்துறை அதிகாரிகள், தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக தேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை போராட்டத்திற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இந்த வார தொடக்கத்தில் வெளியேற்றப்பட்ட முன்னாள் அதிபர் பெட்ரோ காஸ்டிலோவுக்கு ஆதரவாக நாட்டின் பல நகரங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com