

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடுமையான பனிப்புயல் காரணமாக, இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த சில நாள்களாகவே கடுமையான பனிப்புயல் வீசி வருகின்றது. அமெரிக்கா முழுவதும் பனியால் உறைந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை திடீரென தோன்றிய வெடிகுண்டு சூறாவளியால் பலர் பாதிக்கப்பட்டன. கடுமையான வானிலை காரணமாக வீடுகள் மற்றும் வணிகங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
கரோனா பெருந்தொற்றால் முடங்கிப்போன மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தயாரான நிலையில், பனிப்புயல் காரணமாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட முடியாமல் தடைப்பட்டன.
குளிர்கால சூறாவளியால் நாடு முழுவதும் பனிபடர்ந்த சாலைகள் காணப்பட்டன. வாகனங்கள் சாலையில் இயக்கமுடியாமல் திணறினர்.
விமானங்கள், ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
நியூயார்க், சிகாகோ மற்றும் சியாட்டில் சர்வதேச விமான நிலையங்கள் உள்பட விமானச் சேவை பாதிக்கப்பட்டு 5 ஆயிரம் அமெரிக்க விமானங்கள் கடந்த வெள்ளியன்று ரத்து செய்யப்பட்டது.
அமெரிக்காவின் பல பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் டிகிரியில் காணப்படுகிறது. மோசமான வானிலையால் பல இடங்களில் வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
கடுமையான பனிப்புயல் காரணமாக இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகியுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனக் கூறப்படுகிறது.
மேற்கு நியூயார்க் மாநிலத்தில் பஃபலோ மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக இறப்புகள் பதிவாகியுள்ளன. அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டனில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகக் குறைந்த வெப்பநிலை நேற்று பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.